சிங்கப்பூரில் அடித்தள அளவில் காற்பந்து விளையாட்டை வளர்க்க சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்துடன் (எஃப்ஏஎஸ்) இணைந்து புதிய சமூகப் பயிற்றுவிப்பாளர் மேம்பாட்டுத் திட்டத்தை இங்கிலிஷ் பிரிமியர் லீக் தொடங்கியுள்ளது.
அதில் பங்கேற்கும் முதல் 34 உள்ளூர் சமூகக் காற்பந்துப் பயிற்றுவிப்பாளர்கள் மூன்று நாள் பயிற்சியில் பங்கேற்றனர். அவர்கள் எஃப்ஏஎஸ் சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களில் 21 வயது முதல் 69 வயது வரையிலான ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்கள் உள்ளடங்கினர்.
பிரிமியர் லீக்கின் அனைத்துலக ஆலோசகர் ஏடம் லியா, லிவர்பூல் காற்பந்துப் குழுப் பயிற்றுவிப்பாளர் ஜேக் மெக்கவர்ன், நோட்டிங்கம் ஃபாரஸ்ட் அணி பயிற்றுவிப்பாளர் ஏரன் கட்ரிஸ் ஆகியோர் அப்பயிற்சியை வழிநடத்தினர்.
“இந்தப் பயிற்சிகளில் பாதி வகுப்பறை நடவடிக்கைகள், பாதி திடல் நடவடிக்கைகள். பயிற்றுவிப்பாளர்கள் எவ்வாறு தம் இளம் விளையாட்டாளர்களின் அனுபவங்களை மேம்படுத்த முடியும் என்பதை நாம் கற்பிக்கிறோம்,” என்றார் ஏடம் லியா.
மூன்று நாள் பயிற்சியின் முடிவில் சனிக்கிழமை (மே 24) காலாங் காற்பந்து நடுவத்தில் நடைபெற்ற சமூகக் காற்பந்துக் கண்காட்சிக்கு முன்னாள் பிரிமியர் லீக் மற்றும் இங்கிலாந்து தேசிய அணி விளையாட்டாளர்களான ஜான் பார்ன்ஸ், ஜோ ஹார்ட் வந்திருந்தனர்.
அவர்களுடன், மக்கள் கழகம் தேர்ந்தெடுத்த 10 முதல் 12 வயது வரையிலான 80 உள்ளூர் சிறுவர்கள் பங்கேற்றனர். பயிற்றுவிப்பாளர்கள் மூன்று நாள் பயிற்சியில் கற்ற திறன்களை அதன் மூலம் வெளிப்படுத்தினர்.
சிங்கப்பூருக்கான பிரிட்டிஷ் தூதர் நிக்கேஷ் மேத்தாவும் வந்திருந்தார். “சிங்கப்பூருக்கும் இங்கிலாந்துக்கும் சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் காலத்திலிருந்து நெடுங்காலத் தொடர்பு இருந்துள்ளது. ஆனால் மக்கள்தான் இந்த உறவை மேலும் சிறப்பிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“நீங்கள் இளையர்களை ஆதரிக்கிறீர்கள். சிலரால் அனைத்து நிலைகளிலும் காற்பந்தை அணுக முடிவதில்லை. அவர்களுக்கு நீங்கள் வாய்ப்பளிக்கிறீர்கள்,” என அடித்தளப் பயிற்றுவிப்பாளர்களைப் பாராட்டினார் திரு மேத்தா.
இப்பயிற்சியில் பங்கேற்ற உட்குரோவ் சமூக மன்ற ‘பேஷன்’ சமூகக் காற்பந்துப் பயிற்றுவிப்பாளர் ராமநாதன் துரைசாமி, 53, பயிற்சி பயனுள்ளதாக அமைந்ததெனக் கூறினார்.
“எவ்வாறு பாதுகாப்பாக, எல்லாருக்கும் புதிய விஷயங்களைக் கற்பித்து சுவாரசியமாகக் காற்பந்துப் பாடங்களை நடத்துவது என ‘ஸ்மைல்’ எனும் உத்திவழிக் கற்றுக்கொண்டோம்.
“இப்பயிற்சியில் நான் கற்றுக்கொண்ட படிப்பினையை, அடித்தள அளவில் என்னுடன் பணியாற்றும் துணைப் பயிற்றுவிப்பாளர்களுக்கும் என்னால் கொண்டுசெல்ல முடியும்,” என்றார் திரு ராமநாதன்.
அனைத்துலக அளவில் காற்பந்தை மேம்படுத்த உள்ளூர் பயிற்றுவிப்பாளர்களை ஈடுபடுத்துவது அவசியம் என்றார் ஜான் பார்ன்ஸ். “பயிற்றுவிப்பாளர்களைப் பொறுத்தவரை அனைவருக்கும் ஏற்ற ஒரே உத்தியென ஒன்றுமில்லை,” என ஒவ்வொருவரைப் பற்றியும் புரிந்துகொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினார் ஜோ ஹார்ட்.
தொடர்ந்து பிரிமியர் லீக், எஃப்ஏஎஸ் உடன் இணைந்து இத்திட்டத்தை மேம்படுத்தும்.