மான்செஸ்டர் சிட்டியிலிருந்து விடைபெறுகிறார் கார்டியோலா

மான்செஸ்டர் சிட்டியிலிருந்து விடைபெறுகிறார் கார்டியோலா

1 mins read
174260a8-7ab4-4ce4-af96-c1ff67b2bdb3
பெப் கார்டியோலா பயிற்சியின்கீழ் மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு 17 கிண்ணங்களை வென்றிருக்கிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: முன்னணி இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்களில் ஒன்றான மான்செஸ்டர் சிட்டியின் நிர்வாகியான பெப் கார்டியோலா, இப்பருவ இறுதியுடன் அக்குழுவிலிருந்து விடைபெறுகிறார்.

இதனை சிட்டி குழு வெள்ளிக்கிழமை (மே 22) உறுதிப்படுத்தியது.

இதன்மூலம் இங்கிலிஷ் காற்பந்தின் பெருவெற்றிக் காலம் ஒன்று முடிவிற்கு வருகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டில் சிட்டியுடன் இணைந்தார் கார்டியோலா. அவரது நிர்வாகத்தின்போது அக்குழு ஆறு முறை பிரிமியர் லீக் பட்டத்தையும், மும்முறை எஃப்ஏ கிண்ணத்தையும், ஐந்து முறை லீக் கிண்ணத்தையும், ஒருமுறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது.

ஆயினும், கடந்த இரு பருவங்களாக பிரிமியர் லீக் பட்டம் அதன் கைவசமாகவில்லை.

வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடக்கவுள்ள இப்பருவத்தின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லாவுடன் சிட்டி பொருதவுள்ளது.

“நான் விலகுவதற்கான காரணம் குறித்து எதுவும் கேட்காதீர்கள். இது நான் விடைபெறும் நேரம் என்பது என் ஆழ்மனத்திற்குத் தெரியும்,” என்று 55 வயதான கார்டியோலா தெரிவித்துள்ளார்.

“எதுவுமே நிலையானதன்று. அப்படியிருந்தால், நான் இங்கேயே இருக்கலாம். ஆயினும், இந்த உணர்வு, இங்குள்ள மக்கள், நினைவுகள், மான்செஸ்டர் சிட்டிமீது நான் கொண்டுள்ள அன்பு ஆகியவை என்றென்றும் நிலைத்திருக்கும்,” என்றார் அவர்.

இதனிடையே, செல்சி குழுவின் முன்னாள் நிர்வாகியான என்ஸொ மரெஸ்கா சிட்டி குழுவின் புதிய நிர்வாகிக்கான போட்டியில் முன்னணியில் இருப்பதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்