ஓஸ்லோ: நார்வே சதுரங்கப் போட்டியில் மெக்னஸ் கார்ல்சனை உலகச் சதுரங்க வெற்றியாளரான இந்தியாவின் டி. குகேஷ் தோற்கடித்தார்.
ஆறாவது சுற்றில் கார்ல்சன் செய்த பிழையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட குகேஷ், வெற்றியை உறுதி செய்தார்.
இறுதி நகர்வுக்குப் பிறகு, தாம் வெற்றி பெற்றுவிட்டதை உணர்ந்த குகேஷ், இன்ப அதிர்ச்சியில் தமது இருக்கையிலிருந்து எழுந்து அங்கிருந்து நடந்து சென்றார்.
நார்வேயைச் சேர்ந்த சதுரங்க நட்சத்திரம் கார்ல்சனைத் தோற்கடித்துவிட்டோம் என்பதை அவரால் நம்ப முடியவில்லை.
உலக சதுரங்க வெற்றியாளரான குகேஷ், உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் கார்ல்சனைத் தோற்கடித்திருப்பது அவருக்கு மேலும் பெருமையைச் சேர்த்துள்ளது.
இதற்கு முன்பு, சதுரங்க சகாப்தம் கேரி கேஸ்பரோவ் உலகத் தரவரிசையில் முதலிடம் வகித்தபோது அவரை நட்சத்திர வீரர்களான அனடோலி கார்போவ், விளாடிமிர் கிராம்னிக், வி. ஆனந்த் ஆகியோரால்கூட தோற்கடிக்க முடியவில்லை.
தோல்வி அடைந்துவிட்டோம் என்று தெரியவந்ததும் கார்ல்சன் விரக்தியில் சதுரங்கக் காய்களைப் பலகையிலிருந்து தட்டிவிட்டார்.
பிறகு, தாம் செய்தது தவறு என்று உணர்ந்து குகேஷின் கையைக் குலுக்கி அந்தப் பதின்மவயதினரைப் பாராட்டும் வகையில் அவரது முதுகில் தட்டிக்கொடுத்தார்.