தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பட்டத்தை நெருங்கும் மேன்சிட்டி

2 mins read
56955ae9-a4b9-4846-a678-d6cfa819b4f1
ஸ்பர்ஸ் குழுவிற்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் மேன்சிட்டி குழுவின் முதல் கோலைப் போடும் எர்லிங் ஹாலண்ட். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை நெருங்கியிருக்கிறது மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு. இம்முறையும் வென்றால், தொடர்ந்து நான்காவது முறையாக அப்பட்டம் சிட்டி வசமாகிவிடும்.

செவ்வாய்க்கிழமை (மே 14) இரவு நடந்த ஆட்டத்தில் சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவைத் தோற்கடித்தது. நட்சத்திர ஆட்டக்காரர் எர்லிங் ஹொலாண்ட் அவ்விரு கோல்களுக்கும் சொந்தக்காரர்.

இதன்மூலம், 88 புள்ளிகளுடன், இரண்டாம் நிலையிலுள்ள ஆர்சனல் குழுவைவிட இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்று முதல் நிலையைப் பிடித்துள்ளது சிட்டி.

இன்னும் ஓர் ஆட்டமே எஞ்சியுள்ள நிலையில், மே 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் கடைசி நாள் ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் நேரப்படி ஞாயிறு இரவு 11 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தனது சொந்த எட்டிஹாட் அரங்கில் சிட்டி குழு, வெஸ்ட் ஹேம் யுனைடெட்டை எதிர்த்தாட இருக்கிறது.

இந்நிலையில், “கடைசி ஆட்டம் விம்பிள்டன் பட்டத்திற்கு ‘செர்வ்’ செய்வது போன்றது,” எனக் குறிப்பிட்டார் சிட்டி குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா.

“எதற்காக விளையாடுகிறோம் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். பதற்றம் இருக்கிறது. ஓர் ஓய்வு நாளுக்குப் பிறகு, கடைசி ஆட்டத்திற்குத் தயாராக இரண்டு நாள்கள் உள்ளன. எங்களால் முடிந்த அளவு சிறப்பாகச் செயல்படுவோம்,” என்று கார்டியோலா கூறினார்.

இதனிடையே, 20 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டம் வெல்லும் கனவுடன் இருக்கும் ஆர்சனல் குழு, தனது கடைசி ஆட்டத்தில் எவர்ட்டனை எதிர்த்தாடவுள்ளது. அந்த ஆட்டத்தில் ஆர்சனல் வென்று, சிட்டி குழு தனது ஆட்டத்தில் தோற்றுப்போனால் அல்லது சமநிலை கண்டால், இபிஎல் பட்டம் ஆர்சனலிடம் தஞ்சமடைந்துவிடும்.

குறிப்புச் சொற்கள்