ஃபெராரிக்கு முதல் வெற்றியைப் பதிவு செய்த ஹாமில்டன்

ஃபெராரிக்கு முதல் வெற்றியைப் பதிவு செய்த ஹாமில்டன்

2 mins read
9cf62368-ba41-486d-a919-0089a6452b7f
ஸ்பிரின்ட் (Sprint) என்னும் குறைந்த தூரம் கொண்ட கார்ப் பந்தயத்தில் வெற்றிபெற்ற ஹாமில்டன். - படம்: ஃபார்முலா ஒன் 

பெய்ஜிங்: ஃபார்முலா ஒன் கார்ப் பந்தயத்தில் ஃபெராரி அணிக்குத் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார் லூயிஸ் ஹாமில்டன்.

இந்தப் பருவத்தின் இரண்டாவது கார்ப் பந்தயம் தற்போது சீனாவில் நடைபெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமை (மார்ச் 21) ஸ்பிரின்ட் (Sprint) என்னும் குறைந்த தூரம் கொண்ட கார்ப் பந்தயத்திற்கான தகுதிச் சுற்று நடந்தது. அதில் ஹாமில்டன் முதலிடத்தில் முடித்தார்.

அதையடுத்து சனிக்கிழமை (மார்ச் 22) நடந்த ‘ஸ்பிரின்ட்’ பந்தயத்தை ஹாமில்டன் வென்றார்.

‘ஸ்பிரின்ட’ பந்தயத்தில் 19 முறை பந்தயத் தடத்தைச் சுற்றி வரவேண்டும். தொடக்கம் முதலே தெளிவாகச் செயல்பட்ட ஹாமில்டன் எந்தத் தவறும் செய்யாமல் பந்தயத்தை முடித்தார்.

ஹாமில்டனுக்குப் பின்னால் நெருக்கடி கொடுத்த ரெட்புல் அணியில் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் இறுதியில் மூன்றாம் இடத்தில் முடித்தார். சிறப்பாகச் செயல்பட்ட மெக்லாரெனின் ஆஸ்கர் பியாஸ்டிரி இரண்டாம் இடத்தில் வந்தார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடக்கும் முழு கார்ப் பந்தயத்திற்கான தகுதிச் சுற்றில் ஆஸ்கர் பியாஸ்டிரி முதல் இடம் பிடித்தார்.

இரண்டாவது இடத்தில் மெர்சிடிஸ் குழுவின் ஜார்ஜ் ரசல் வந்தார். மூன்றாவது இடம் மெக்லாரெனின் நாரிசுக்கு கிடைத்தது.

வெர்ஸ்டாப்பன் நான்காவது இடத்திலும் ஹாமில்டன் ஐந்தாவது இடத்திலும் பந்தயத்தைத் தொடங்குவார்கள்.

ஏழு முறை உலக வெற்றியாளர் கிண்ணத்தை வென்ற ஹாமில்டன் எட்டாவது கிண்ணத்தை வெல்ல காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நான்கு உலக வெற்றியாளர் கிண்ணத்தை வென்ற வெர்ஸ்டாப்பன் இந்தப் பருவத்தில் அதை ஐந்தாவது கிண்ணமாக மாற்ற நம்பிக்கை கொண்டுள்ளார்.

சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு கார்ப் பந்தயம் தொடங்குகிறது.

குறிப்புச் சொற்கள்