மும்பை: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் அணிகளுள் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹார்திக் பாண்டியா அடுத்த ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் விளையாட முடியாது.
லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிராக சனிக்கிழமை (மே 17) நடந்த போட்டியில் மும்பை அணி பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக எடுத்துக்கொண்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் அவ்வணி இப்படி மெதுவாகப் பந்துவீசியது மூன்றாம் முறை என்பதால் அதன் தலைவர் பாண்டியாவிற்கு ஓர் ஆட்டம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், நடப்புத் தொடரில் மும்பை அணி தனது கடைசி ஆட்டத்தை விளையாடிவிட்டதால் 2025 தொடரின் முதல் ஆட்டத்தில் பாண்டியாவால் விளையாட முடியாது. அடுத்த பருவத்தில் பாண்டியா எந்த அணிக்காக விளையாடினாலும் இத்தடை பொருந்தும்.
அத்துடன், அவருக்கு ரூ.30 லட்சமும் மும்பை அணி வீரர்களுக்கு ரூ.12 லட்சம் அல்லது போட்டித்தொகையில் 50 விழுக்காடும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோ அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை அணி 18 ஓட்ட வித்தியாசத்தில் தோற்றுப்போனது. இதனையடுத்து, அவ்வணி இம்முறை 14ல் நான்கு ஆட்டங்களில் மட்டும் வென்று, எட்டுப் புள்ளிகளுடன் கடைசி இடத்தில் முடித்தது.
முந்திய 2023, 2022 பருவங்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவராகச் செயல்பட்ட பாண்டியா, இப்பருவத்தில் மீண்டும் மும்பை அணிக்குத் திரும்பினார். அதனைத் தொடர்ந்து, அவ்வணியின் தலைமைப் பதவியும் ரோகித் சர்மாவிடமிருந்து பறிக்கப்பட்டு, பாண்டியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இருந்தபோதும், அவருக்கு இப்பருவம் மறக்க வேண்டிய ஒன்றாக அமைந்துவிட்டது. ஆட்டத்திற்குச் சராசரியாக 18 ஓட்டங்கள் என்ற நிலையில், பந்தடிப்பிலும் அவரது செயல்பாடு சிறப்பாக இல்லை.