மியூனிக்: ஜெர்மானிய காற்பந்து லீக்கான ‘பண்டஸ்லிகா’வில் (Bundesliga) ஆக வேகமாக 50 கோல்களைப் போட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இங்கிலாந்து அணித் தலைவர் ஹேரி கேன்.
கேன் விளையாடும் பயர்ன் மியூனிக் குழு, ‘பண்டஸ்லிகா’வில் ஆக்ஸ்பர்க் (Augsburg) எனும் குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் மூன்று கோல்களையும் போட்டார் கேன்.
அதனைத் தொடர்ந்து ஆக வேகமாக லீக்கில் 50 கோல்களை எட்டி சாதனை படைத்தார். 43 ‘பண்டஸ்லிகா’ ஆட்டங்களில் 50 கோல்களைப் டோட்டிருக்கிறார் கேன்.
முன்னதாக பொருசியா டார்ட்மண்டுக்கு 50 ஆட்டங்களில் 50 கோல்களைப் போட்டு இச்சாதனையைப் படைத்திருந்தார் நார்வே நட்சத்தர்ம் எர்லிங் ஹாலண்ட். அதற்குப் பிறகு ஹாலண்ட், இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் சிட்டியில் சேர்ந்தார்.
ஆக்ஸ்பர்குக்கு எதிரான ஆட்டத்தில் கேன் இரண்டு பெனால்டி வாய்ப்புகளை கோலாக்கினார். பயர்னின் முதல் இரண்டு கோல்கள் பெனால்டிகளில் விழுந்தன.
இரண்டாவது, மூன்றாவது கோல்கள் ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் விழுந்தன.
இந்த ‘பண்டஸ்லிகா’ பருவத்தில் பயர்ன், இதுவரை விளையாடியுள்ள 11 ஆட்டங்களிலும் தோல்வியடையவில்லை. ஒன்பது ஆட்டங்களில் வெற்றிபெற்று, இரண்டில் சமநிலை கண்டிருக்கிறது பயர்ன்.