தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான் பார்த்ததிலேயே சிறந்த ஆட்டம்: சச்சின் பாராட்டு

2 mins read
4a00210b-19b7-41e4-a6d9-da9c992ef856
ஆட்ட நாயகன் கிளென் மேக்ஸ்வெல்லை (வலது) பாராட்டும் சக ஆஸ்திரேலிய வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

மும்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியைத் தனியொருவனாகத் தோளில் தூக்கிச் சுமந்த கிளென் மேக்ஸ்வெல்லின் ஆட்டமே ஒருநாள் போட்டிகளில் தான் கண்ட ஆகச் சிறந்த ஆட்டம் என்று இந்திய கிரிக்கெட் செம்மல் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த அப்போட்டியில் மேக்ஸ்வெல் இரட்டைச் சதமடித்து வெற்றி தேடித் தர, ஆஸ்திரேலிய அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

ஆப்கான் அணி 292 ஓட்டங்களை ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

இரண்டாவதாகப் பந்தடித்த ஆஸ்திரேலியா, ஒரு கட்டத்தில் 18.3 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து, 91 ஓட்டங்களை மட்டும் எடுத்திருந்தது.

அவ்வேளையில், ஒருமுனையில் அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் பொறுமையாக ஆடி விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள, மறுமுனையில் மேக்ஸ்வெல் எதிரணியினர் வீசிய பந்துகளை நாலாபுறமும் எல்லைக்கு அனுப்பினார்.

அவர் 76 பந்துகளில் 100 ஓட்டங்களையும் 128 பந்துகளில் 200 ஓட்டங்களையும் எட்டினார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஸத்ரான் 129 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இந்நிலையில், மேக்ஸ்வெல்லின் ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

“இப்ராகிம் ஸத்ரானின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணி நல்ல நிலைக்குச் சென்றது. இரண்டாம் பாதியையும் அவர்கள் நன்கு தொடங்கினர். ஆனால், கடைசி 25 ஓவர்களில் மேக்ஸ்வெல்லின் ஆட்டம், அவர்களின் அதிர்ஷ்டத்தை மாற்றப் போதுமானதாக இருந்தது.

“பெருநெருக்கடியிலும் பெருஞ்சாதனை! அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் நான் கண்டதிலேயே சிறந்த பந்தடிப்பு இதுதான்,” என்று சச்சின் டெண்டுல்கர் தமது எக்ஸ் ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களும் கேசவ் மகராஜ், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட இந்நாள் ஆட்டக்காரர்களும் மேக்ஸ்வெல்லின் செயல்பாட்டை வெகுவாகப் புகழ்ந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்