தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரோகித் விளையாடாவிடில் இந்திய அணியின் தலைவர் இவர்தான்: காம்பீர்

1 mins read
71fac1ba-fd58-457b-b666-0e82a00466e4
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் கௌதம் காம்பீர். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடாவிடில், ஜஸ்பிரீத் பும்ரா இந்திய அணித்தலைவராகச் செயல்படுவார் என்பதை தலைமைப் பயிற்றுநர் கௌதம் காம்பீர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐந்து போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது.

அவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இம்மாதம் 22ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெறவுள்ளது.

ரோகித்தின் மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதால் அப்போட்டியில் ரோகித் விளையாடுவாரா இல்லையா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இந்நிலையில், “இப்போதைக்கு ரோகித் விளையாடுவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அவர் விளையாடுவார் என நம்புகிறேன். தொடர் தொடங்குமுன் அதுபற்றித் தெரியப்படுத்துவோம்,” என்று காம்பீர் கூறினார்.

மேலும், “பும்ராதான் அணியின் துணைத் தலைவர். ரோகித் இல்லாவிடில், முதல் டெஸ்ட்டில் இந்திய அணியை அவரே வழிநடத்துவார்,” என்றும் காம்பீர் தெரிவித்துள்ளார்.

ரோகித் விளையாடாவிடில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இந்திய அணியின் இன்னொரு தொடக்க ஆட்டக்காரராக யார் களமிறங்குவார் என்பதிலும் இழுபறி நிலவுகிறது.

“அபிமன்யு ஈஸ்வரன், கே.எல். ராகுல் என மேலும் இரு தொடக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணியில் உள்ளனர். ஆதலால், சிறந்த பதினொருவரே களமிறங்குவர். அதுபற்றி போட்டிக்குமுன் முடிவு செய்யப்படும்,” என்று காம்பீர் சொன்னார்.

இந்திய அணி வீரர்கள் சிலர் ஏற்கெனவே ஆஸ்திரேலியா சென்றுவிட்ட நிலையில், எஞ்சியுள்ளவர்கள் திங்கட்கிழமை (நவம்பர் 11) புறப்பட்டுச் செல்வர் எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்