அடிலெய்ட்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
ஐந்து டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் அடிலெய்டில் பகல் இரவு ஆட்டமாக நடக்கிறது.
முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய அணி 180 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ஓட்டங்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் பந்தடிக்கத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி கவனமாக விளையாடி, ஓட்டங்கள் எடுத்து முதல் நாள் முடிவில் 86 ஓட்டங்கள் எடுத்தது.
இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா சிறப்பாகச் செயல்பட்டது. மார்னஸ் லபுசேன் 64 ஓட்டங்கள் எடுத்தார்.
அவருக்குப் பக்கபலமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 141 பந்துகளில் 140 ஓட்டங்கள் எடுத்தார். ஹெட்டின் அதிரடி ஆட்டத்தால் இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறினர்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ஓட்டங்கள் எடுத்து 157 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது இன்னிங்சில் பெரிய அளவில் ஓட்டங்கள் குவிக்க வேண்டிய நிலையில் இந்தியப் பந்தடிப்பாளர்கள் உள்ளனர். ஓட்டங்கள் குவிக்கத் தவறினால் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றிவாய்ப்பு கூடும்.