மான்செஸ்டர்: யூயேஃபா சாம்பியன்ஸ் லீக் (UEFA Champions League) காற்பந்துப் போட்டியில் தனது முழு ஆற்றல் அறிந்தோரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் மான்செஸ்டர் சிட்டி நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட்.
செக் குடியரசைச் சேர்ந்த ஸ்பார்ட்டா பிராக் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் காற்றில் தாவி கோல் போட்டார் ஹாலண்ட். சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா, ஹாலண்டின் சகக் குழுவினர், இணையவாசிகள் எனப் பல தரப்பினர் இன்ப வெள்ளத்தில் மூழ்கினர்.
ஸ்பார்ட்டா பிராகை 5-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான சிட்டி. ஆட்டத்தில் ஒரு ‘மாயாஜால’ கோலுடன் இன்னொரு கோலையும் போட்டார் ஹாலண்ட்.
ஜான் ஸ்டோன்ஸ், ஃபில் ஃபோடன், மத்தேயுஸ் நுனெஸ் (பெனால்டி) ஆகியோர் சிட்டியின் மற்ற மூன்று கோல்களைப் போட்டனர்.
அபாரமான மற்றொரு சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ஸ்பெயினின் பார்சிலோனா, ஜெர்மனியின் பயர்ன் மியூனிக்கை 4-1 எனும் கோல் கணக்கில் வதம் செய்தது. அந்த ஆட்டத்தில் முன்னாள் லீட்ஸ் யுனைடெட் வீரரான ரஃபின்யா மூன்று கோல்களைப் போட்டார்.
முன்னாள் பயர்ன் நட்சத்திரமான ராபர்ட் லெவண்டொவ்ஸ்கி, பார்சிலோனாவின் மற்றொரு கோலைப் போட்டார்.