பார்பேடாஸ்: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அமெரிக்காவை எளிதில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
சனிக்கிழமை காலை நடந்த இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அமெரிக்கா 128 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
ஆண்ட்ரே ரசல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சுழற்பந்துவீச்சாளர் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
எளிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஷே ஹோப் - சார்ல்ஸ் இணை வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
ஹோப் அதிரடியாக விளையாட, சார்ல்ஸ் நிதானமாக விளையாடினார். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 67 ஓட்டங்கள் எடுத்தது. சார்ல்ஸ் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும் அதன் பின்னர் வந்த நிக்கோலஸ் பூரனும் அதிரடியை தொடர்ந்தார்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 10.5 ஓவர்களில் 130 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ஹோப் 39 பந்துகளில் 82 ஓட்டங்கள் குவித்தார். ஆட்டநாயகன் விருதை ரோஸ்டன் சேசுக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு மிகமுக்கியமான ஒன்று என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.