பேலஸ் மீதுதான் எனது முழு கவனம்: நிர்வாகி

1 mins read
9f75d65b-6e56-4d48-895b-e7f3fbf3d9f6
கிறிஸ்டல் பல்ஸ் நிர்வாகி ஒலிவர் கிளாஸ்னர். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் குழுவான கிறிஸ்டல் பேலசின் நிர்வாகி ஒலிவர் கிளாஸ்னர் இந்தப் பருவத்தின் இறுதியில் குழுவிலிருந்து வெளியேறப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் பருவம் முடியும் வரை பேலசை வழிநடத்துவதில்தான் தனது முழு கவனமும் இருக்கும் என்று கிளாஸ்னர் கூறியிருப்பதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

இப்பருவம் தொடங்குவதற்கு முன்பு கிளாஸ்னர், பொறுப்பில் கூடுதல் காலம் நீடிக்க பேலஸ் அவருக்கு வாய்ப்பளித்ததாகவும் அதற்கு வகைசெய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர் மறுத்ததாகவும் பிபிசி ஊடகத்தின் விளையாட்டுப் பிரிவு தெரிவித்திருந்தது. குழுவின் முக்கிய விளையாட்டாளர்கள் மற்ற குழுக்களுக்கு விற்கப்படும் முறை குறித்து கிளாஸ்னர் அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எடுத்துக்காட்டாக, சென்ற வாரம் சனிக்கிழமை (ஜனவரி 17) பேலசும் சண்டர்லண்டும் லீக்கில் மோதவிருந்த நிலையில் அதற்கு முதல் நாள் பேலஸ் அணித்தலைவர் மார்க் குவெஹி மான்செஸ்டர் சிட்டிக்கு விற்கப்பட்டார்.

அந்த ஆட்டத்தில் பேலஸ், சண்டர்லண்டிடம் 2-1 எனும் கோல் கணக்கில் தோல்வியுற்றது. அதற்குப் பிறகு பேசிய 51 வயது கிளாஸ்னர், பேலஸ் நிர்வாகம் தனது குழுவை முழுமையாகக் கைவிட்டதாகச் சாடினார்.

கிளாஸ்னரின் தலைமையில் சென்ற பருவம் பேலஸ் எஃப்ஏ கிண்ணத்தை வென்றது. இறுதியாட்டத்தில் சிட்டியை வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது பேலஸ்.

அதுவே பேலஸ் தனது வரலாற்றில் வென்ற முதல் முக்கியக் கிண்ணமாகும்.

கிளாஸ்னர், மான்செஸ்டர் யுனைடெட்டின் அடுத்த நிர்வாகியாக நியமிக்கப்படக்கூடும் என்ற வதந்திகளும் இருந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்