கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியத்தின்மீது விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கிக்கொள்வதாக அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) அறிவித்தது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாட்டில் அந்நாட்டு அரசின் தலையீடு இருப்பதாகக் கூறி, கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி அவ்வாரியத்தை ஐசிசி இடைநீக்கம் செய்திருந்தது.
இதனையடுத்து, மோசமான நிர்வாகம், ஊழல், நிதி முறைகேடு இருந்ததாகக் கூறி, இலங்கை தலைமைத் தணிக்கை அதிகாரி 112 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது.
நீதிமன்ற மேல்முறையீட்டை அடுத்து, அவ்வாரியம் தற்காலிகமாக மீண்டும் நிறுவப்பட்டது. பிறகு அது திரும்பவும் கலைக்கப்பட்டு, அதன்பின் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இந்நிலையில், “இடைநீக்கம் செய்யப்பட்டதிலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளை ஐசிசி குழு கண்காணித்து வருகிறது. அதன்பிறகு, உறுப்பு நாடாகத் தனக்குள்ள கடப்பாடுகளிலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் மீறவில்லை என்பதால் அதன்மீதான தடை உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது,” என்று ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.