நியூயார்க்: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.
ஆட்டம் நியூயார்க் நகரில் உள்ள நசாவ் கவுண்டி அணைத்துலக கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்கும்.
பலம் வாய்ந்த இந்தியா அணி
சில நாள்களுக்கு முன்பு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை எளிதாக வீழ்த்தியது. வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா சிறப்பாக செய்ல்பட்டனர்.
பந்தடிப்பிலும் அணித் தலைவர் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட அதிரடியாக விளையாடினர். விராத் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ரவீந்தர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே என நட்சத்திர வீரர்கள் பலர் உள்ளதால் இந்திய அணி சற்று பலம் வாய்ந்த அணியாகவே உள்ளது.
இந்த ஆட்டத்தை இந்தியா வென்றால் அதன் அடுத்தசுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். ஏற்கெனவே இந்த ஆடுகளத்தில் இந்தியா விளையாடியுள்ளதால் அந்த அனுபவம் பெரிதாக உதவும் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பரிதாபம்
அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ‘சூப்பர் ஓவரில்’ பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இதனால் பாகிஸ்தான் இந்திய அணிக்கு எதிராக கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழலில் களமிறங்குகிறது.
பந்தடிப்பு, பந்துவீச்சு, களகாப்பு என அனைத்து பிரிவுகளிலும் சிக்கலை எதிர்நோக்குகிறது பாகிஸ்தான். இந்த ஆட்டத்தை பாகிஸ்தான் வெல்லத் தவறினால் அதன் அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட பறிபோகிவிடும். அதனால் பாகிஸ்தான் கவனமாக விளையாடக்கூடும்.
இதற்கு முன்னர் இரு அணிகளும் 2022ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் ஆட்டத்தில் மோதின. கடைசி ஓவர் வரை வெற்றி யார் பக்கம் என்பது தெரியாமல் இருந்தது. அதனால் இந்த ஆட்டத்திலும் அனல் பறக்கும் என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.