மும்பை: நடப்பு வெற்றியாளரான ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து, மகளிர்க்கான ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
அரையிறுதி ஆட்டத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்களைக் குவிக்க, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 339 ஓட்டங்கள் என்ற இலக்கை ஒன்பது பந்துகள் எஞ்சிய நிலையிலேயே இந்திய அணி எட்டியது. ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக எட்டப்பட்ட ஆகப் பெரிய இலக்கு இதுதான்.
இதன்மூலம் உலகக் கிண்ணப் போட்டிகளில் தொடர்ந்து 15 ஆட்டங்களாக நீடித்த ஆஸ்திரேலியாவின் வெற்றிநடை தடைபட்டது.
மும்பை டிஒய் பாட்டீல் அரங்கில் வியாழக்கிழமை (அக்டோபர் 30) நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதலில் பந்தடித்தது.
அவ்வணியின் தொடக்க வீராங்கனை ஃபோபி லிட்ச்ஃபீல்டு 93 பந்துகளில் 119 ஓட்டங்களைக் குவித்தார். எலிஸ் பெர்ரி 77 ஓட்டங்களையும் ஆஷ்லி கார்ட்னர் 63 ஓட்டங்களையும் விளாசினர்.
இறுதியில், 49.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ஓட்டங்களை எடுத்தது.
இதற்குமுன் 300 ஓட்டங்களுக்கு மேற்பட்ட இலக்கை எட்டியிராத இந்தியா, இம்முறை சொந்த நாட்டு ரசிகர்களுக்குமுன் அதனைச் சாதித்துக் காட்டும் முனைப்போடு களமிறங்கியது.
தொடர்புடைய செய்திகள்
தொடக்கப் பந்தடிப்பாளர்களான ஷஃபாலி வர்மாவும் (10) ஸ்மிரிதி மந்தானாவும் (24) விரைவில் ஆட்டமிழந்தனர். ஆயினும், அதன்பின் ஜெமிமா - அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் இணை எதிரணியின் பந்துகளைத் திறம்பட எதிர்கொண்டு சீரான வேகத்தில் ஓட்டம் குவித்தது.
ஹர்மன்பிரீத் 89 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 167 ஓட்டங்களைச் சேர்த்தனர்.
பின்னர் தீப்தி சர்மாவும் (24) ரிச்சா கோஷும் (26) குறைந்த பந்துகளில் மளமளவென ஓட்டம் குவித்து நம்பிக்கை அளித்தனர். 49வது ஓவரின் மூன்றாவது பந்தில் அமன்ஜோத் கவுர் அடித்த நான்கு மூலம் இந்திய அணி வெற்றிக்கோட்டைத் தொட்டது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்தாடவிருக்கிறது.
இதற்குமுன் 12 முறை உலகக் கிண்ணத் தொடர் நடந்துள்ள நிலையில், ஏழு முறை ஆஸ்திரேலியாவும் நான்கு முறை இங்கிலாந்தும் வாகை சூடின. ஒருமுறை நியூசிலாந்து கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.
ஆஸ்திரேலியாவோ இங்கிலாந்தோ இல்லாமல் இறுதிப் போட்டி நடப்பது இதுவே முதன்முறை.
அரையிறுதி வெற்றிக்குப் பின் பேசிய ஹர்மன்பிரீத், “பெருமையாக உள்ளது. சொல்ல வார்த்தைகளே இல்லை. பல ஆண்டுக் கூட்டு உழைப்பிற்குப் பிறகு இம்முறை இந்நிலையை எட்டியுள்ளோம். எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒருவராலும் எந்த ஆட்டத்தையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளோம்,” என்றார்.
இதற்குமுன் 2005, 2017 என இருமுறை இந்திய அணி இறுதிவரை சென்றும் முறையே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளிடம் தோற்று, கிண்ண வாய்ப்பை இழந்தது.

