தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஷமி விக்கெட் வேட்டை; இந்தியா வெற்றித் தொடக்கம்

2 mins read
ba8ba71f-f9c0-45e8-a1ea-6d87e0eaf832
ஐந்து விக்கெட் வீழ்த்தி, ஆட்ட நாயகன் விருது வென்ற மகிழ்ச்சியைச் சக இந்திய வீரர் ஜடேஜாவுடன் (வலது) பகிர்ந்துகொள்ளும் முகம்மது ஷமி. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

மொகாலி: அண்மையில் ஆசியக் கிண்ணத்தை வென்ற கையோடு, ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகிய முன்னணி வீரர்களுக்கு முதலிரு போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) நடந்த ஆட்டத்தில் கே எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

பூவா தலையாவில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது.

மிட்செல் மார்ஷை நான்கு ஓட்டங்களில் வெளியேற்றி தனது விக்கெட் வேட்டையைத் தொடங்கினார் இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகம்மது ஷமி. டேவிட் வார்னர் (52), ஸ்டீவ் ஸ்மித் (41), மார்னஸ் லபுஷேன் (39), கேமரன் கிரீன் (31), ஜோஷ் இங்லிஷ் (45), மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் (29) ஆகியோர் சொல்லிக்கொள்ளும்படி ஆடினாலும் நிலைத்து ஆடவில்லை.

ஆஸ்திரேலிய அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் ஒன்பது பந்துகளில் 21 ஓட்டங்களை விளாசினார். இறுதியில், அவ்வணி 50 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 276 ஓட்டங்களைச் சேர்த்தது.

முகம்மது ஷமி ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்தார். அணிக்குத் திரும்பிய அஸ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் (71) - ஷுப்மன் கில் (74) இணை அருமையான தொடக்கம் கொடுத்தது.

பின்னர் ராகுல் ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 50 ஓட்டங்களையும் விளாச, இந்திய அணி எட்டுப் பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் இலக்கை எட்டி, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தது.

இரண்டாவது போட்டி 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தூரில் நடக்கவிருக்கிறது.

சொந்த மண்ணில் இரண்டாம் முறையாக உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் எனும் வேட்கையுடன் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, வெற்றிமேல் வெற்றி குவித்துவருவது அவ்வணி ரசிகர்களுக்குக் கூடுதல் நம்பிக்கை தருவதாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்