தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா குதூகலம்; பாகிஸ்தான் ஏமாற்றம்

2 mins read
b8cb7a9c-c54d-46f8-bcb1-87f8623fdbf8
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 51வது சதம் அடித்த விராட் கோஹ்லி. - படம்: ஏஎஃப்பி

துபாய்: அனைத்துலக கிரிக்கெட் மன்றம் நடத்தும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) துபாய் அனைத்துலக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் முதல்முறையாக அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் போட்டி ஒன்றை அதன் மண்ணில் நடத்துகிறது.

இருப்பினும், பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுத்துவிட்டது.

எனவே, இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் துபாயில் நடத்தப்பட்டது.

முதலில் பந்தடித்த பாகிஸ்தான், 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களை எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இந்தியப் பந்தடிப்பாளர்கள் சிறப்பாக விளையாடினர்.

42.3 ஓவர்களில், நான்கு விக்கெட்டுகள் இழந்து 244 ஓட்டங்கள் குவித்து இந்தியா வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி சதம் விளாசினார்.

இது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் அடிக்கும் 51வது சதம். கோஹ்லி ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 14,000 ஓட்டங்களை அவர் கடந்தார்.

இந்த தோல்வியால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

“பாகிஸ்தானின் கிண்ணக் கனவை இந்தியா கலைத்துவிட்டது. அதுதான் உண்மை. பங்ளாதேஷ்-நியூசிலாந்து, நியூசிலாந்து-இந்தியா ஆகிய ஆட்டங்களின் முடிவுகளைப் பொறுத்தே பாகிஸ்தான் போட்டியில் தொடருமா அல்லது வெளியேறுமா என்பது தெரிந்துவிடும். அணித் தலைவர் என்கிற முறையில் இத்தகைய சூழலில் சிக்கியிருப்பது எனக்குக் கடுகளவும் பிடிக்கவில்லை,” என்று செய்தியாளர்களிடம் விரக்தியுடன் தெரிவித்தார் பாகிஸ்தான் அணித் தலைவர் முகம்மது ரிஸ்வான்.

270லிருந்து 280 ஓட்டங்கள் வரை குவித்திருந்தால் பாகிஸ்தானின் நிலை வலுவாக இருந்திருக்கக்கூடும் என்றும் வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும் என்றும் ரிஸ்வான் கூறினார்.

பாகிஸ்தானின் நடுவரிசை பந்தடிப்பாளர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்ததாக அவர் மிகுந்த ஏமாற்றத்துடன் தெரிவித்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் செய்த தவறுகளை பாகிஸ்தான் அணியினர் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் செய்ததாக அவர் அதிருப்திக் குரல் எழுப்பினார்.

இந்தியாவிடம் சுருண்ட பாகிஸ்தான் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) பங்ளாதேஷுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் நடைபெறுகிறது.

2017ஆம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவைத் தோற்கடித்து பாகிஸ்தான் கிண்ணத்தை ஏந்தியது.

ஆனால் இம்முறை இந்திய வீரர்களின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திக்குமுக்காடியது.

குறிப்புச் சொற்கள்