திருவனந்தபுரம்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முந்நூறு ஓட்டங்களுக்கும் மேலான வித்தியாசத்தில் வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
இலங்கை அணிக்கெதிராக திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (15-1-2023) நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பந்தடித்த இந்திய அணி, 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 390 ஓட்டங்களைக் குவித்தது. தொடக்க வீரர் ஷுப்மன் கில்லும் (116) நட்சத்திர வீரர் விராத் கோஹ்லியும் (166*) சதம் விளாசினர்.
அதன்பின் பந்தடித்த இலங்கை அணி 73 ஓட்டங்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 317 ஓட்ட வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
2008ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணி 290 ஓட்ட வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இருந்ததே முன்னைய சாதனை.
முதலிரு போட்டிகளிலும் வென்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

