மும்பை: மகளிர் உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்று வரலாறு படைத்துள்ளது. நவி மும்பையின் டிஒய் பாட்டில் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா 52 ஓட்ட வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதற்கு முன்னர் இரண்டு முறை (2005, 2017) இறுதிப்போட்டியில் பங்கெடுத்த இந்தியா, அப்போது நழுவவிட்ட வெற்றியை இப்போது பெற்றுள்ளது.
முதலில் பந்தடித்த இந்தியா, 7 விக்கெட் இழப்புக்கு 298 ஓட்டங்களைக் குவித்தது. ஸ்மிரிதி மந்தனாவும் ஷஃபாலி வர்மாவும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 104 ஓட்டங்களைச் சேர்த்தனர். மந்தனா 45 ஓட்டம் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷஃபாலி சிறப்பாக ஆடி 87 ஓட்டங்களை அடித்தார். அவர் 7 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களையும் விளாசினார்.
ஜெமிமா ரோட்ரிக்சும் அணித்தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுரும் ஆட்டமிழந்தபோதும் தீப்தி ஷர்மா விவேகத்துடன் ஆடி 58 ஓட்டம் எடுத்தார். பிறகு அமன்ஜோட் கவுர் ஆட்டமிழந்த நிலையில் தீப்தியுடன் சேர்ந்த ரிச்சா கோஷ், வேகம் காட்டினார். 24 பந்துகளில் 34 ஓட்டங்களை அடித்தார். அவர் 3 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் விளாசினார். தென்னாப்பிரிக்காவின் அயபோங்கா காக்கா 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
299 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா. அணித்தலைவர் லாரா வோல்வார்ட்டும் டஸ்மின் பிரிட்சும் சேர்ந்து 51 ஓட்டம் எடுத்திருந்தபோது பிரிட்ஸ் ஆட்டமிழந்தார். பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது தென்னாப்பிரிக்கா.
இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா, ஸ்ரீ சரணி ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசினர். அன்னெரி டெர்க்ஸன் நம்பிக்கை தந்தார். 35 ஓட்டம் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
தனியாகப் போராடிய வோல்வோர்ட், அரையிறுதியைப் போன்றே இறுதிப்போட்டியிலும் சதமடித்தார். அவர் ஆட்டமிழந்ததும் தென்னாப்பிரிக்க நம்பிக்கை இழந்தது. இறுதியில் 246 ஓட்டம் எடுத்த நிலையில் நடீன் டி கிளார்க் அடித்த பந்தை முத்தாய்ப்பாகப் பிடித்த அணித்தலைவர் ஹர்மன்ப்ரீத் இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார்.
தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளையும் ஷஃபாலி வர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகியாக ஷஃபாலி வர்மாவும் தொடர்நாயகியாக தீப்தி ஷர்மாவும் வென்றனர்.

