தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆப்கானுக்கு எதிரான ஆட்டத்தில் முத்திரை பதித்த இந்தியா

1 mins read
c58c220c-405e-41fe-8542-96301a45c5b6
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 28 பந்துகளில் 53 ஓட்டங்களைக் குவித்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

பார்பேடாஸ்: பந்தடிப்பில் சூர்யகுமார் யாதவும் பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ராவும் மிளிர, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் ‘சூப்பர் 8’ சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 47 ஓட்ட வித்தியாசத்தில் வாகை சூடியது.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பலமாக இருப்பதால் இந்திய அணிக்கு இந்த ஆட்டம் மிகுந்த சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்தது இந்திய அணி. மூன்றாவது ஓவரிலேயே எட்டு ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார் அணித்தலைவர் ரோகித் சர்மா.

ஆயினும், விராத் கோஹ்லி (24), ரிஷப் பன்ட் (20), சூர்யகுமார் (53), ஹார்திக் பாண்டியா (32) ஆகியோரின் பங்களிப்பால் இந்திய அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களைக் குவித்தது.

இலக்கை விரட்டிய பங்ளாதேஷ் அணி தொடக்கத்திலிருந்தே சீராக விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக, அவ்வணியினரால் இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் பந்துகளை எதிர்கொள்ள இயலவில்லை. அவர் நான்கு ஓவர்களில் ஏழு ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோற்றுப் போனது. சூர்யகுமார் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அடுத்ததாக, சனிக்கிழமை (ஜூன் 22) இரவு 10.30 மணிக்கு நடக்கவுள்ள முதல் பிரிவு ஆட்டத்தில் இந்தியா, பங்ளாதேஷை எதிர்த்தாடவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்