புதுடெல்லி: இந்தியா, 2030ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுகளை ஏற்று நடத்த எண்ணம் கொண்டுள்ளது.
அந்தப் பரிந்துரைக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டுகளை ஏற்றுநடத்துவதன் மூலம் உள்ளூர் வர்த்தகர்கள் பலனடைவர் என்று இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும், அடுத்த தலைமுறை விளையாட்டாளர்களை உருவாக்க இது உதவும் என்றும் இந்தியா நம்புகிறது.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் 2030 காமன்வெல்த் விளையாட்டுகளை நடத்துவதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளை அந்நகரில் உள்ள, 132,000 இருக்கைகளைக் கொண்ட விளையாட்டரங்கில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விளையாட்டரங்கிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளை அகமதாபாத் நகரில் ஏற்றுநடத்துவது இந்தியாவின் கனவாகும். 2030 காமன்வெல்த் விளையாட்டுகளை ஏற்றுநடத்துவது அம்முயற்சியில் அங்கம் வகிக்கிறது.
முன்னதாக 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுகள் இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் அரங்கேறின. எனினும், ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற பிரச்சினைகளால் 2010 காமன்வெல்த் விளையாட்டுகளுக்கு அவப்பெயர் ஏற்பட்டது.
அந்த அவப்பெயரைத் துடைக்க 2030 காமன்வெல்த் விளையாட்டுகள் வாய்ப்பளிப்பதாகக் கருதப்படுகிறது.