தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி: நேபாளத்தை வீழ்த்தி ‘சூப்பர் 4’ சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா

2 mins read
d7089169-06a6-474c-852f-5dbce9189918
நேப்பாள வீரர் அடித்த பந்தைப் பிடிக்காமல் நழுவவிட்ட இந்திய வீரர் ஜடேஜா. - படம்: இந்திய ஊடகம்

கொழும்பு: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேப்பாளம் ஆகிய 6 அணிகள் கலந்துகொள்ளும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் குழு சுற்றுப் போட்டிகள் நடந்துவருகிறது.

திங்கட்கிழமை பல்லகெலேவில் நடந்த நேப்பாள அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் பூவா தலையாவில் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. நேப்பாள அணியின் குஷால் புர்ட்டெலெயும் ஆசிஃப் ஷேக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 65 ஓட்டங்கள் சேர்த்தனர்.

இந்திய அணி வீரர்கள் முதல் 5 ஓவர்களில் மூன்று பந்து பிடிக்கும் வாய்ப்புகளை நழுவ விட்டனர்.

மழையால் ஆட்டம் சிறிதுநேரம் தடைப்பட்டது.

நேப்பாள அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களை சேர்த்தது.

அந்த அணிக்காக ஆசிஃப் ஷேக் 58 ஓட்டங்கள், சொம்பல் கமி 48 ஓட்டங்கள், குஷால் புர்ட்டெல் 38 ஓட்டங்கள் எடுத்தனர்.

இந்திய அணி வீரர் ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 40 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மற்ற பந்து வீச்சாளர்கள் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

231 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு ஷுப்மான் கில்லும் ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம்கண்டனர். இந்திய அணி 2.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது.

அதனால், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி, இந்திய அணி 23 ஓவர்களில் 145 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வெற்றி இலக்கை விக்கெட் இழப்பின்றி அடைந்தனர். இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது.

ரோகித் 74 ஓட்டங்களும், கில் 67 ஓட்டங்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா ‘சூப்பர் 4’ சுற்றுக்குள் நுழைந்தது.

குறிப்புச் சொற்கள்