மூன்றாம் நாளிலேயே வாகை சூடிய இந்தியா

மூன்றாம் நாளிலேயே வாகை சூடிய இந்தியா

2 mins read
1d1efaa5-2293-4af6-9d67-7255f4ecc338
ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்த அஸ்வினைப் பாராட்டுகிறார் சக இந்திய வீரர் முகம்மது சிராஜ். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2
Google News Preferred Icon

தர்மசாலா: தொடர்ந்து நான்கு தோல்விகளைப் பரிசாக அளித்து, இங்கிலாந்து கிரிக்கெட் அணியை ஏமாற்றத்தோடு நாடு திரும்பச் செய்துள்ளது இந்திய அணி.

கடைசி, ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாளிலேயே வெற்றியைத் தன்வசமாக்கியது இந்தியா.

கடந்த வியாழக்கிழமை (மார்ச் 7) தொடங்கிய அப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ஓட்டங்களை எடுத்தது.

அதன்பின் தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்தியா, இரண்டாம் நாள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 473 ஓட்டங்களை எடுத்திருந்தது.

மூன்றாம் நாளான சனிக்கிழமை மேலும் நான்கு ஓட்டங்களுக்கு எஞ்சிய இரண்டு விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா, 477 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்சை முடித்துக்கொண்டது.

பின்னர் 259 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்சை ஆடத் தொடங்கியது இங்கிலாந்து. ஆயினும், அஸ்வினின் சுழலில் தொடக்கம் முதலே அவ்வணி ஆட்டங்கண்டது.

தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அஸ்வின், ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ் இருவரும் ஆளுக்கு இரண்டு விக்கெட்டுகளைச் சாய்க்க, இங்கிலாந்து அணி 195 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, இன்னிங்ஸ் மற்றும் 64 ஓட்ட வித்தியாசத்தில் தோற்றுப்போனது.

தனியாளாகப் போராடிய ஜோ ரூட் 84 ஓட்டங்களை எடுத்தார். மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் அஸ்வின்.

முதல் போட்டியில் தோற்றபோதும், அடுத்த நான்கு போட்டிகளில் வாகை சூடிய இந்தியா, 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

ஐந்தாவது போட்டியில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். தொடரில் 712 ஓட்டங்களைக் குவித்த இந்திய அணியின் தொடக்கப் பந்தடிப்பாளர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

குறிப்புச் சொற்கள்