குவாலியர்: இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் டி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும் டி20 உலகக் கிண்ணத்தை தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்திய கிரிக்கெட் அணி பங்ளாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் பல இளம் நட்சத்திரங்களை அறிமுகம் செய்துள்ளது.
மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்த டி20 தொடரில் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார். முதல் ஆட்டம் குவாலியர் விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) நடக்கிறது.
சிங்கப்பூர் நேரப்படி இரவு 9:30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.
இவ்வாண்டு ஐபிஎல் தொடரில் தமது அதிவேக பந்துவீச்சால் அணிகளை திணறடித்த மயன்க் யாதவ் இத்தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வீசக்கூடிய மயன்க் யாதவ் தமது உடற்தகுதியை நிரூபிக்க இது சரியான நேரம் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ரியன் பராக், நித்திஷ் குமார் என பந்தடிப்பில் இளம் அதிரடி வீரர்கள் உள்ளனர்.
அனுபவமுள்ள ஹார்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். பந்துவீச்சில் ஹர்சித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங் மட்டுமே பந்துவீச்சில் அனுபவம் கொண்டவராக உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
குவாலியர் ஆடுகளம் பந்தடிப்பாளர்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதனால் இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடக்கூடும்.
டெஸ்ட் தொடரை இழந்த பங்ளாதேஷ் அணி அனுபவம் வாய்ந்த டி20 அணியைக் கொண்டு வெற்றிபெற முயற்சி செய்யும்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் விளையாட்டு அரங்கம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்துலகக் கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது.
ஆட்டத்தின்போது எந்த பாதுகாப்பு குறைபாடுகளும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக 2,500க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.