தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய வரலாறு: ஆகக் குறைந்த பந்துகளில் முடிந்த டெஸ்ட் போட்டி

2 mins read
3092cb52-a908-41ae-95ef-e4b75850e9ff
இரண்டாவது போட்டியை வென்று, டெஸ்ட் தொடரைச் சமன்செய்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் இந்தியாவின் விராத் கோஹ்லி. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

கேப்டவுன்: டெஸ்ட் கிரிக்கெட்டின் 147 ஆண்டுகால வரலாற்றில் ஆகக் குறைந்த பந்துகளில் முடிந்த போட்டி என்ற பெருமையைப் பெற்றுள்ளது தென்னாப்பிரிக்க, இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி.

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடந்த அந்தப் போட்டி 107 ஓவர்களில் (642 பந்துகளில்) முடிந்தது.

புதன்கிழமை (ஜனவரி 3) தொடங்கி, இரண்டாம் நாளிலேயே முடிவிற்கு வந்த இந்தப் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து, இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் 1-1 எனச் சமநிலையில் முடிந்தது.

இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 55 ஓட்டங்களையும் இந்தியா 153 ஓட்டங்களையும் எடுத்தன.

முதல் நாள் முடிவில் தனது இரண்டாம் இன்னிங்சில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 62 ஓட்டங்களை எடுத்திருந்த தென்னாப்பிரிக்க அணி, இரண்டாம் நாளில் 176 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அவ்வணியின் தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் 103 பந்துகளில் 106 ஓட்டங்களைக் குவித்தார். இந்திய அணித் தரப்பில் ஐஸ்பிரீத் பும்ரா ஆறு விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

பின்னர் 79 ஓட்டங்கள் என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி 12 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றி, தென்னாப்பிரிக்க அணியின் சரிவிற்குக் காரணமாகத் திகழ்ந்த இந்திய வீரர் முகம்மது சிராஜ் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தென்னாப்பிரிக்க அணியின் டீன் எல்கரும் இந்திய அணியின் பும்ராவும் தொடர் நாயகர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் ஆகக் குறைவான ஓட்டங்கள் எடுக்கப்பட்ட போட்டியும் இதுதான். இந்தப் போட்டியில் மொத்தமே 464 ஓட்டங்கள்தான் எடுக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்