இருவரின் சதத்தால் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிரணி

1 mins read
ff9a0da1-5d2d-4bcf-abf3-d0de68bb278e
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தானா (இடது), பிரத்திகா ராவல். - படம்: ஏஎப்பி
multi-img1 of 3

மும்பை: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி நான்காவது அணியாக அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற்றுவரும் அப்போட்டிகளில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் ஏற்கெனவே அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டன.

அடுத்தடுத்த போட்டிகளில் அம்மூன்று அணிகளிடமும் தோற்றுப்போன இந்திய மகளிரணி, வியாழக்கிழமை (அக்டோபர் 23) நடந்த போட்டியில் நியூசிலாந்தை 53 ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்தது.

முதலில் பந்தடித்த இந்திய அணி 49 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 340 ஓட்டங்களைக் குவித்தது. தொடக்க வீராங்கனைகளான பிரத்திகா ராவல் 122 ஓட்டங்களையும் ஸ்மிரிதி மந்தானா 109 ஓட்டங்களையும் குவித்தனர். மூன்றாவது ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிகெஸ் 55 பந்துகளில் 76 ஓட்டங்களை விளாசினார்.

மழை காரணமாக நியூசிலாந்து அணி 44 ஓவர்களில் 325 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், அவ்வணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 271 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

அடுத்ததாக, இந்திய அணி வரும் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தனது கடைசி முதற்சுற்று ஆட்டத்தில் பங்ளாதேஷை எதிர்த்தாடவுள்ளது.

அரையிறுதிப் போட்டிகள் இம்மாதம் 29, 30 தேதிகளிலும் இறுதிப் போட்டி நவம்பர் 2ஆம் தேதியும் நடக்கவிருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்