கிளாஸ்கோ: குத்துச்சண்டையில் பெண்களுக்கான 57 கிலோகிராம் எடைப் பிரிவில் உலக வெற்றியாளராகத் திகழ்கிறார் இந்தியாவின் ஜைஸ்மின் லம்போரியா.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் இவ்வாண்டின் காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கம் வெல்வது இவரின் இலக்காகும்.
தோனி ‘தரும்’ உற்சாகம்
குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்தாலும், வெற்றி இலக்கால் எழக்கூடிய நெருக்குதலைக் கையாள்வதில் இந்திய கிரிக்கெட் சகாப்தம் எம்எஸ் தோனியை இவர் முன்னுதாரணமாகக் கொண்டுள்ளார்.
“தோனியின் மனப்போக்கு எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்கிறார் அமைதியான குணத்தைக் கொண்டிருக்கும் லம்போரியா. “காரணத்துடன்தான் அவர் ‘அசராத அணித்தலைவர்’ (Captain Cool) என்றழைக்கப்படுகிறார். அவரைப் போல் நானும் அசராமல் இருக்க விரும்புகிறேன்,” என்று லம்போரியா கூறியதாக பிபிசி ஊடகம் தெரிவித்தது.
ராணுவத்தில் சேர்ப்பு
2022ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுகளில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றார். அதற்குப் பிறகு இந்திய ராணுவத்தில் சேர்ந்த முதல் குத்துச்சண்டை வீராங்கனையாக விளங்குகிறார் லம்போரியா.
ராணுவக் காவல்துறைப் பிரிவில் லம்போரியா சேர்ந்தார். விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் பதக்கம் வெல்லச் செய்யும் இலக்குடன் தொடங்கப்பட்ட ‘மிஷன் ஒலிம்பிக்ஸ் விங்’ திட்டத்தின்கீழ் இவர் இப்போது பயிற்சி பெற்றுவருகிறார்.
“என்னிலிருந்து இந்தப் போக்கைத் தொடர அவர்கள் எண்ணம் கொண்டிருந்தது எனக்குப் பெருமை அளிக்கிறது. அதேபோல், மற்ற வீராங்கனைகளுக்கு முன்னுதாரணமாக விளங்குவதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பாகவும் இதை நான் பார்க்கிறேன்,” என்று அத்திட்டத்தைப் பற்றிப் பேசினார். இந்தியாவின் ஒலிம்பிக் தங்கமகனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட வெற்றியாளர்களை ‘மிஷன் ஒலிம்பிக்ஸ் விங்’ திட்டம் உருவாக்கியுள்ளது.
ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.3,000,000 ஊக்கத் தொகை
இதற்கிடையே, காமன்வெல்த் விளையாட்டுகளில் எடை தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தூத்துக்குடி வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்வர் விஜய் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
தமிழக அரசின் சார்பில் ராஜா முத்துப்பாண்டிக்கு மூன்று லட்ச ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் திரு விஜய் அறிவித்துள்ளார்.

