தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்.பி.யைக் கைப்பிடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்

2 mins read
1bc39e33-2913-4f14-8b58-12ad48b0699d
கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் - பிரியா சரோஜ் எம்.பி.யின் திருமண நிச்சயதார்த்தம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நடைபெற்றது. - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 3

லக்னோ: அதிரடிப் பந்தடிப்பிற்குப் பெயர்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் தன் வாழ்வில் இன்னோர் அடியையும் எடுத்துவைக்க இருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம், மச்லிசாகர் தொகுதியின் சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிரியா சரோஜுக்கும் ரிங்கு சிங்கிற்கும் திருமணம் நடக்கவுள்ளது.

அவர்களது திருமண நிச்சயதார்த்தம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) லக்னோவில் நடந்தேறியது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரவீண் குமார், பியூஷ் சாவ்லா, உத்தரப் பிரதேச மாநில அணித்தலைவர் ஆர்யன் ஜுயால், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அக்கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ராஜீவ் சுக்லா உள்ளிட்டோர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அண்மையில் நடந்து முடிந்த இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் ரிங்குவின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை. கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் இவ்வாண்டு ஐபிஎல் தொடர்பில் 206 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். 2024 ஐபிஎல் தொடரின் வெற்றியாளரான கோல்கத்தா அணி இம்முறை 12 புள்ளிகளுடன் பட்டியலில் எட்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

ஐபிஎல்லில் மிளிராவிடினும், இந்திய டி20 அணியில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார் ரிங்கு. இதுவரை 30 அனைத்துலக டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 46.09 என்ற சராசரியுடன் 507 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அதில் மூன்று அரைசதங்களும் அடங்கும். உத்தரப் பிரதேச மாநிலம், அலிகாரைச் சேர்ந்த அவர் இந்திய அணி சார்பில் இரு ஒருநாள் போட்டிகளிலும் களமிறங்கியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்