உறவில் விரிசல்: தந்தையின் குற்றச்சாட்டை மறுக்கும் முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்

ராஜ்கோட்: குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டதற்குத் தன் மருமகளே காரணம் என்று முன்னணி இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங் ஜடேஜா குற்றம் சாட்டியுள்ளார்.

‘திவ்ய பாஸ்கர்’ என்ற முன்னணி குஜராத்தி நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் அவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தம் தந்தையின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஜடேஜா, ‘அவை முட்டாள்தனமானவை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016 ஏப்ரலில் ஜடேஜாவிற்கும் ரிவாபா என்ற பெண்ணுக்கும் திருமணமானது. அதன்பின் தங்கள் உறவு கசந்துபோனதாக அனிருத்சிங் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதுபோன்ற ‘இட்டுக்கட்டிய நேர்காணல்களை’ நம்ப வேண்டாம் என்று டுவிட்டர் பதிவு வழியாகக் கேட்டுக்கொண்டுள்ளார், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா.

தன்னுடைய மற்றும் தன் மனைவியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ரிவாபா, வடக்கு ஜாம்நகர் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

“திவ்ய பாஸ்கர் நாளிதழில் வெளியாகியுள்ள ஐயத்திற்குரிய நேர்காணலில் கூறப்பட்டுள்ள அனைத்தும் பொருளற்றவை, பொய்யானவை. ஒருதரப்புக் கருத்துகளே அதில் இடம்பெற்றுள்ளன. அவற்றை நான் மறுக்கிறேன். எங்களின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள அம்முயற்சி முறையற்றது, கண்டிக்கத்தக்கது. நான் சொல்ல வேண்டியதும் ஏராளமுண்டு. ஆனால், அவற்றைப் பொதுவெளியில் வெளியிடாமல் இருப்பது நல்லது,” என்று ஜடேஜா பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, குடும்பத்தில் சண்டையை ஏற்படுத்துவதாக மருமகள் ரிவாபாமீது அனிருத்சிங் குற்றஞ்சாட்டியிருந்தார்.

“அவன் என் மகன். அது என் இதயத்தைச் சுடுகிறது. என் மகனுக்குத் திருமணம் செய்து வைக்காமல் இருந்திருக்கலாம் என விரும்புகிறேன். அவன் கிரிக்கெட் வீரராகாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

“திருமணமான மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே, எல்லாவற்றையும் தன் பெயருக்கு மாற்றி எழுதும்படி என் மருமகள் என்னிடம் சொன்னாள். எங்கள் குடும்பத்தில் அவர் விரிசலை உண்டாக்கினாள். அவள் குடும்பமாகச் சேர்ந்து வாழ விரும்பவில்லை; சுதந்திரமாக வாழ விரும்பினாள். நான் சொல்வது தவறாக இருக்கலாம், என் மகள் நேனபா சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால், எங்கள் குடும்பத்தினர் 50 பேர் சொல்வதும் தவறாக இருக்குமா, சொல்லுங்கள்! குடும்பத்தினர் எவருடனும் அவர்களுக்கு நல்ல உறவுமுறை இல்லை; வெறுப்பே மிகுந்துள்ளது,” என்று அனிருத்சிங் கூறியிருந்தார்.

இதனிடையே, இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஜடேஜா காயத்திற்காகச் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து, பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கும் மூன்றாவது போட்டியில் விளையாடுவாரா என்பது இன்னும் தெரியவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!