தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனைவி, குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குக் கட்டுப்பாடு

2 mins read
7ac3dd3f-2af6-4ac9-92c2-54e909086773
அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. - படம்: ஏஎஃப்பி

மும்பை: சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியிடம் 0-3 என டெஸ்ட் தொடரை இழந்த இந்திய கிரிக்கெட் அணி, அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்று அவ்வணியிடமும் 1-3 எனத் தோல்விகண்டது.

இதன் எதிரொலியாக, தனது அணி வீரர்களின் செயல்திறனை மேம்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இந்திய வீரர்கள் இனித் தங்களுடன் மனைவி, குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியாது என்று ‘தைனிக் ஜாக்ரன்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்விதிமுறை புதிதாக அறிமுகம் செய்யப்படவில்லை. முன்னர் நடப்பிலிருந்த இவ்விதிமுறை கொவிட்-19 தொற்றுப் பரவல் காலகட்டத்தின்போது அகற்றப்பட்டது.

ஆயினும், முழுமையாகத் தடை விதிக்காமல் சற்று தளர்வுடனே இவ்விதி நடைமுறைப்படுத்தப்படும் என பிசிசிஐ தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவ்வகையில், ஒரு தொடர் 45 நாள்களுக்குமேல் நீடித்தால், வீரர்களுடன் அவர்களின் மனைவி அல்லது குடும்பத்தினர் 14 நாள்கள்வரை தங்கியிருக்கலாம். குறுகியகாலம் நடக்கும் தொடர்களில் ஏழு நாள்கள்வரை வீரர்களுடன் அவர்களின் குடும்பத்தினர் தங்க முடியும்.

மேலும், எந்த ஒரு வீரரும் தனியாகப் பயணம் செய்யவும் பிசிசிஐ கட்டுப்பாடு விதித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், ஒரு சில வீரர்கள் அணிப் பேருந்தில் செல்லாமல் தனியாகச் சென்றதை பிசிசிஐ அதிகாரிகள் கண்டதாகச் சொல்லப்படுகிறது.

அணியின் ஒற்றுமையைக் கருத்தில்கொண்டு, இனி அனைவரும் அணிப் பேருந்தில்தான் செல்லவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (ஜனவரி 11) மும்பையிலுள்ள பிசிசிஐ தலைமையகத்தில் வாரிய அதிகாரிகள், தலைமைப் பயிற்றுநர் கௌதம் காம்பீர், தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கர், அணித்தலைவர் ரோகித் சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்ட மறுஆய்வுக் கூட்டத்தில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்