தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விராத் விக்கெட்டை வீழ்த்த விரும்பும் இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர்

1 mins read
daddce7c-a3b7-4887-8ebe-5fcd6482319e
நெதர்லாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆர்யன் தத். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: நடப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராத் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்த விரும்புவதாகக் கூறுகிறார் நெதர்லாந்து அணியின் ஆர்யன் தத், 20.

இந்திய வம்சாவளி வீரரான ஆர்யன், “எல்லா விக்கெட்டுகளுமே எனக்கு முக்கியந்தான். ஆயினும், கோஹ்லியின் விக்கெட்டைக் கைப்பற்ற விரும்புகிறேன். அதுவே இந்த உலகக் கிண்ணத் தொடரில் எனக்குக் கிடைக்கும் ஆகச் சிறந்த பரிசாக இருக்கும் என நினைக்கிறேன்,” என்று சொன்னார்.

இம்மாதம் 12ஆம் தேதி பெங்களூரில் நடக்கும் போட்டியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதவிருக்கின்றன.

இதுவரை ஆடிய ஆறு போட்டிகளிலும் சேர்த்து கோஹ்லி 354 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அதேபோல, வலக்கைச் சுழற்பந்து வீச்சாளரான ஆர்யனும் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். ஆறு போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள அவர், சராசரியாக ஓவருக்கு 4.96 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, எதிரணிகளுக்குச் சவாலாகத் திகழ்ந்து வருகிறார்.

“என் திறமையை நான் நம்புகிறேன். என் பந்துவீச்சை எதிர்கொள்ளும் பந்தடிப்பாளர்கள் குறித்து நான் அதிகம் கவலைப்படுவதில்லை. துல்லியமாகப் பந்துவீசி, பந்தடிப்பாளரை ஏமாற்றுவதில்தான் என் கவனமெல்லாம் உள்ளது,” என்றார் ஆர்யன்.

இதற்குமுன் தென்னாப்பிரிக்கா, பங்ளாதேஷ் அணிகளை வீழ்த்திய நம்பிக்கையோடு, நெதர்லாந்து இம்மாதம் 3ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

குறிப்புச் சொற்கள்