கோல்கத்தா: இந்திய சூப்பர் லீக்கில் இடம்பெற்றுள்ள ஆகப் பழமையான காற்பந்துக் குழுவான மோகன் பகான் சூப்பர் ஜயண்ட், திங்கட்கிழமை (ஜனவரி 26) நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி குழுவுடன் பொருதுகிறது.
அதை முன்னிட்டு, மோகன் பகான் ரசிகர்கள் கைகளால் ஓவியம் வரைந்து அதற்கு வண்ணம் தீட்டிவரும் 25,500 சதுர அடி பரப்பளவைக் கொண்ட பதாகை ஒன்று தயாராகி வருகிறது.
இந்த மாபெரும் பணிக்காக, கோல்கத்தா சால்ட் லேக் விளையாட்டரங்கிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புல்வெளியில் அவர்கள் வாரக்கணக்கில் முகாமிட்டு வந்துள்ளனர்.
அந்தப் பதாகை, 340 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டிருக்கும். அது, கைகளால் வரையப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்ட ஆகப்பெரிய பதாகை என்ற உலகச் சாதனை படைக்கும் என மோகன் பகான் ரசிகர்கள் உறுதியுடன் உள்ளனர். சுவீடன் குழு ஐஎஃப்கே நோர்கோப்பிங்கின் ரசிகர்கள் தயாரித்திருந்த 16,000 சதுர அடிக்கும் அதிகமான பதாகையே தற்போதைய உலகச் சாதனையாக உள்ளது.
‘மரினர்ஸ் பேஸ் கேம்ப்’ ரசிகர் குழு உறுப்பினரான பிரசஞ்சித் சர்கார், “தொடர்ந்து 20 நாள்கள் ஐந்து பாகங்களாக நாங்கள் இதைத் தயாரித்தோம்,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
1889ல் தொடங்கப்பட்ட மோகன் பகான் குழு, ‘தி மரினர்ஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் ஏறக்குறைய 20 பேரால் சாயம் பூசப்பட்ட அந்தப் பதாகை, மாபெரும் கயிறுகளால் தாங்கப்படும் என சர்கார் சொன்னார்.

