புதுடெல்லி: இந்தியக் காற்பந்து அணியின் தலைவரும் நட்சத்திர ஆட்டக்காரருமான சுனில் சேத்ரி, 39, அவ்விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
வரும் ஜூன் மாதம் 6ஆம் தேதி நடக்கவிருக்கும் குவைத்திற்கு எதிரான உலகக் கிண்ணத் தகுதிச்சுற்று ஆட்டமே இந்திய அணிக்காக சேத்ரி விளையாடும் கடைசி ஆட்டமாக இருக்கும்.
கடந்த 2005 ஜூன் 12ஆம் தேதி அனைத்துலகக் காற்பந்தில் அடியெடுத்து வைத்த சேத்ரி, அப்போட்டியிலேயே இந்தியாவிற்காகத் தனது முதல் கோலையும் போட்டார்.
“நான் களைப்படைந்ததாகவோ, இப்படியோ அப்படியோ உணரவில்லை,” என்று காணொளி வழியாக அவர் சொன்னார்.
“இதுதான் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று உள்ளுணர்வு தோன்றியதும் அதுபற்றி அதிகம் சிந்தித்து, இம்முடிவிற்கு வந்துள்ளேன்,” என்றார் அவர்.
இப்போதைய அனைத்துலகக் காற்பந்து ஆட்டக்காரர்களில் ஆக அதிக கோல்களை அடித்துள்ளோர் பட்டியலில் மூன்றாம் நிலையில் இருக்கிறார் சேத்ரி. இந்திய அணிக்காக இதுவரை 150 ஆட்டங்களில் விளையாடி, 94 கோல்களை அவர் போட்டுள்ளார்.
அனைத்திந்தியக் காற்பந்துக் கூட்டமைப்பின் சிறந்த வீரருக்கான விருதை ஆறு முறை வென்றிருக்கும் சேத்ரி, 2011ல் அர்ஜுனா விருதும் 2019ல் பத்மஸ்ரீ விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
இந்நிலையில், 19 ஆண்டுகளாக இந்தியாவிற்கு விளையாடியுள்ள சேத்ரிக்கு முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“என் சகோதரருக்கு என் அன்பு. பெருமையாக உள்ளது!” என்று ‘எக்ஸ்’ ஊடகம் வழியாகப் பதிவிட்டுள்ளார் கோஹ்லி. இந்தியக் காற்பந்துக் குழு, பெங்களூரு காற்பந்துக் குழு, ஐபிஎல் கிரிக்கெட் அணிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கோல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகியவையும் சேத்ரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.