அண்மைக்காலமாக விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போதும் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து வருவது குறித்த காணொளிகள் இணையத்தளங்களில் பரபரப்பாக பரவி வருகின்றன.
அவ்வகையில், ஜனவரி 2ஆம் தேதி மஸ்கட்டில், கேரளாவைச் சேர்ந்த இறகுப்பந்தாட்ட வீரர், தன் நண்பர்களுடன் மிகவும் ஆர்வமாக விளையாடிக் கொண்டிருந்த ஒரு நிமிட காணொளியில் பந்துகளை வீசி அடித்து மகிழ்ந்து விளையாடும் காட்சி இணைய தளங்களில் பரவி வருகின்றன.
இப்படி தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தார்.அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. கீழே விழுந்தவரை அவருடைய நண்பர்கள் எழுப்ப முயன்று தோல்வி கண்டனர். இந்த துயரமான நிகழ்வு அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. மாரடைப்பில் உயிரிழந்தவருக்கு 38 வயது. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவர் தொடர்ந்து உள்நாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வந்ததாக அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களில் இது போன்ற உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் காஸியாபாத்தில் உடற்பயிற்சியாளர் ஒருவரும் திருமணத்தில் நடனமாடிய ஒருவரும் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.