துபாய்: ஐக்கிய அரபு சிற்றரசில் தற்போது ஆண்கள் கிரிக்கெட்டுக்கான டி20 ஆசியக் கிண்ணப் போட்டி நடந்து வருகிறது.
இந்நிலையில், துபாயில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) நடந்த ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. அதில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாகப் பாகிஸ்தானை வீழ்த்தியது.
பொதுவாக, கிரிக்கெட் ஆட்டம் முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். ஆனால் இந்திய அணி வெற்றியடைந்தவுடன் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்கவில்லை.
“இந்திய அரசுடன் கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். இங்கு நாங்கள் விளையாட வந்தோம். விளையாடினோம், பதிலடி கொடுத்தோம். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம். அவர்கள் குடும்பத்துடன் நிற்கிறோம். இதன் மூலம் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம்” என்றார் இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ்.
இந்தியர்கள் கைகுலுக்காமல் மறுத்துச் சென்றதையடுத்து பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் ஆகா, போட்டி முடிந்தவுடன் நிகழும் பரிசளிப்பு நிகழ்ச்சியைப் புறக்கணித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. பதிலடி தரும் விதமாக இந்தியா பாகிஸ்தானில் ஆப்பரேஷன் சிந்தூரை நடத்தியது
இதனால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. அதன்பின்னர் இப்போதுதான் முதல்முதலாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியுள்ளன.