தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பறந்து பறந்து விளையாடும் அணிகள்!

2 mins read
ab964d77-c11e-453c-a3b7-1dfe737bc0c8
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் சொந்த மண்ணில் நடந்தாலும் போட்டிகளில் பங்கேற்பதற்காக அதிகத் தொலைவு பயணம் செய்யவிருப்பது என்னவோ இந்திய அணிதான்! - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: உலகக் கிண்ணத்தை கையில் ஏந்த வேண்டும் என்ற துடிப்புடன் உள்ள பத்து கிரிக்கெட் அணிகளும், அதற்காகப் பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு விமானப் பயணம் மேற்கொள்ள இருக்கின்றன.

இம்முறை போட்டியில் பங்கேற்கும் அணிகளில் அதித்க தொலைவு பயணம் மேற்கொள்ளப்போவது இந்திய அணிதான்.

இந்திய வீரர்கள் மொத்தம் 12,897 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்யவுள்ளனர்.

கௌகாத்தி, திருவனந்தபுரம் சென்னை, புதுடெல்லி, அகமதாபாத், புனே, தர்மசாலா, லக்னோ, மும்பை, கோல்கத்தா, பெங்களூரு ஆகிய 11 நகரங்களில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

(இவற்றுள் கௌகாத்தி, திருவனந்தபுரம் என இரு இடங்களிலும் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற இருந்தன. எனினும், அவ்விரு ஆட்டங்களுமே மழையால் கைவிடப்பட்டன.)

மற்ற அணிகளைவிட, இந்திய வீரர்கள் கிட்டத்தட்ட மூவாயிரம் கிலோமீட்டர் கூடுதலாகப் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதேபோல், மற்ற அணிகளும் விமானத்தி்ல் பறந்து பறந்து தங்கள் திறமையை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றன.

இந்திய அணிக்கு அடுத்தபடியாக, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் 10,000 கிலோமீட்டருக்குமேல் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

இங்கிலாந்து அணி 10,079 கிலோமீட்டரும், ஆப்கானிஸ்தான் 10,052 கிலோமீட்டரும், தென்னாப்பிரிக்கா 10,049 கிலோமீட்டரும் பயணம் மேற்கொள்கின்றன.

இந்தப் பட்டியலில், இலங்கை (9,132), பங்ளாதேஷ் (8,978), நியூசிலாந்து (8,528), ஆஸ்திரேலியா (8,436), நெதர்லாந்து (7,929) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இம்முறை குறைவான தொலைவு பயணம் செய்வது பாகிஸ்தான் அணிதான். அந்த அணி பங்கேற்கும் ஆட்டங்கள் ஐந்து நகரங்களில் மட்டுமே நடைபெற உள்ளன.

இதனால், பாகிஸ்தான் வீரர்கள் 6,892 கிலோமீட்டர் மட்டுமே பயணம் செய்வர்.

சொந்த மண்ணில் நடப்பது சாதகம் என்றபோதும், அதிகத் தொலைவு பயணம் செய்ய வேண்டியுள்ள சிரமத்தையும் தாண்டி, இந்திய அணி சாதிக்குமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

குறிப்புச் சொற்கள்