பாரிஸ் ஒலிம்பிக்கில் புதன்கிழமை நடந்த பெண்களுக்கான 50 கிலோ ‘ஃபிரீஸ்டைல்’ மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 29, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதிக உடல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தங்கப் பதக்கத்திற்காக அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ராண்ட் என்பவருக்கெதிராக இவர் களமிறங்க இருந்தார்.
இந்நிலையில், பலவித முயற்சிக்குப் பிறகும், அவர் போட்டியன்று காலை 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார் என்பது வருத்தமளிக்கும் செய்தி என்று சங்கம் தெரிவித்தது.
உடல் எடையைக் குறைக்க மெதுவோட்டம், ‘ஸ்கிப்பிங்’ பயிற்சி செய்து இரவுப் பொழுதைக் கழித்தும், காலையில் 100 கிராம் கூடுதல் எடையுடன் போகத் இருந்தது கண்டறியப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் போகத் பதக்கம் பெறமாட்டார்.
எனினும், ‘யுனைடெட் வேர்ல்ட் ரெஸ்ட்லிங்’ விளையாட்டின் அனைத்துலக நிர்வாகக்குழு எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.