புதுடெல்லி: அண்மையில் முடிவடைந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் மேசைப் பந்து அணியில் அர்ச்சனா காமத் இடம்பெற்றிருந்தார். அவரை உள்ளடக்கிய இந்திய அணி முதன்முறையாக கால் இறுதிச் சுற்றில் கால்பதித்து சாதனை படைத்திருந்தது. எனினும் அந்தச் சுற்றில் இந்திய அணி 1-3 என்ற ஆட்டக்கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. கால் இறுதிச் சுற்றில் மற்ற இந்திய வீராங்கனைகள் தோல்வியைச் சந்தித்த போதிலும் தனது ஆட்டத்தில் அர்ச்சனா காமத் வெற்றியை வசப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் 24 வயதான அவர், மேசைப் பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் அவர், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கை என்ற முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாமல் திரும்பிய அர்ச்சனா காமத், படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
2028ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், இளம் வீராங்கனையான அர்ச்சனா, மேசைப் பந்து விளையாட்டை விட்டு வெளியேறி படிப்பைத் தொடர முடிவு செய்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வீடு திரும்பிய பிறகு அர்ச்சனா காமத், தனது பயிற்றுவிப்பாளர் அன்ஷுல் கார்க்குடன் அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் குறித்து உரையாடினார். அப்போது அன்ஷுல் லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது கடினம், தரவரிசையில் 100 இடங்களுக்கு மேல் இருப்பதால் அதிக அளவிலான உழைப்பைக் கொடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
இதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அர்ச்சனா, இனிமேல் படிப்பில் கவனம் செலுத்த உள்ளேன். இதனால் மேசைப் பந்து விளையாட்டிலிருந்து இருந்து வெளியேறுகிறேன் என தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அன்ஷுல் அதிர்ச்சி அடைந்தார். எனினும், அர்ச்சனா தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.
அர்ச்சனா காமத், பெங்களூரைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர்கள் கண் மருத்துவர்கள். அர்ச்சனாவின் சகோதரர் தற்போது அமெரிக்காவில் விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டத்துக்குப் படித்து வருகிறார்.

