மும்பை: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ணப் (Champions Trophy) போட்டியில் இந்திய அணி இடம்பெறும் ஆட்டங்கள் நடுநிலையான இடத்தில் நடக்கும் என்று அனைத்துலக கிரிக்கெட் மன்றம் அறிவித்துள்ளது.
எட்டு அணிகள் இடம்பெறும் சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அப்போட்டியில் பங்கேற்கத் தாங்கள் பாகிஸ்தான் செல்லப்போவதில்லை என்று இந்தியா அனைத்துலக கிரிக்கெட் மன்றத்திடம் சொன்னதாக பாகிஸ்தான் இம்மாதம் கூறியிருந்தது.
அரசியல் ரீதியான பதற்றம் காரணமாக இருநாட்டு தேசிய அணிகளும் 2013ஆம் ஆண்டிலிருந்து மோதியதில்லை. ஆண்கள் அணிகளுக்கான முக்கியப் போட்டிகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
மேலும், 2008ஆம் ஆண்டிலிருந்து இந்தியா, பாகிஸ்தானில் எந்த ஆட்டத்திலும் விளையாடியதில்லை.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியான சாம்பியன்ஸ் கிண்ணம், 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் ஏற்று நடத்தும் முதல் உலகளாவிய போட்டியாகும்.
2024லிருந்து 2027ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியா அல்லது பாகிஸ்தானில் நடக்கும், அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின்கீழ் வரும் ஆட்டங்களில் இரண்டில் ஒன்று இடம்பெறும் ஆட்டங்கள் நடுநிலையான இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் ஆண்கள் சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டி, அடுத்த ஆண்டு இந்தியா ஏற்று நடத்தும் பெண்கள் உலகக் கிண்ணப் போட்டி, 2026ல் இந்தியாவும் இலங்கையும் இணைந்து ஏற்று நடத்தும் ஆண்கள் டி20 போட்டி ஆகியவை அவற்றில் அடங்கும்.
2028ல் பாகிஸ்தான் ஏற்று நடத்தும் பெண்கள் டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கும் இந்த ஏற்பாடு பொருந்தும்.