மும்பை: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண (Champions Trophy) கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடும் ஆட்டங்கள் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போட்டியை பாகிஸ்தான் ஏற்று நடத்துகிறது. அதில் பங்கேற்கத் தான் பாகிஸ்தான் செல்லப்போவதில்லை என்று இந்தியா தெரிவித்தது என்று முன்னதாக செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து அப்போட்டியில் இந்தியா விளையாடும் ஆட்டங்களுக்கு பாகிஸ்தான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளைத் தெரிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இத்தகவலை வெளியிட்டது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இரண்டும் பல அணிகள் இடம்பெறும் போட்டிகளில் மட்டும்தான் ஒன்றுடன் ஒன்று மோதும். உதாரணமாக, சென்ற ஆண்டு இந்தியாவில் நடந்த ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்றது.
மற்றபடி 2008ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் ஏற்று நடத்திய எந்தப் போட்டியில் பங்கேற்பதற்காகவும் இந்திய அணி, பாகிஸ்தான் சென்றதில்லை. அரசாங்க ஆலோசனைக்கேற்ப தாங்கள் அவ்வாறு செய்து வருவதாக இந்திய அணி தெரிவித்து வருகிறது.
“ஐக்கிய அரபுச் சிற்றரசுகளை நடுநிலையான இடமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது,” என்று அதன் பேச்சாளர் அமீர் மிர் மின்னஞ்சல்வழி தெரிவித்தார். எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும்.
இதேபோல், அடுத்த ஆண்டின் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதில் பாகிஸ்தான், இந்தியா சென்று விளையாடாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவும் இலங்கையும் ஏற்று நடத்தவுள்ள 2026ஆம் ஆண்டு ஆண்கள் டி20 உலகக் கிண்ணப் போட்டி, 2028ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் பெண்கள் டி20 உலகக் கிண்ணப் போட்டி ஆகியவற்றுக்கும் இந்த ஏற்பாடு பொருந்தும்.