தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆக இளைய உலகச் சதுரங்க வெற்றியாளரானார் தமிழகத்தின் குகேஷ்

3 mins read
d2254dd0-6fd7-4569-aa5a-4620f41c1fa1
வாகை சூடிய மகிழ்ச்சியில் சென்னையின் டி குகேஷ். - படம்: Facebook/FIDE

ஆ. விஷ்ணு வர்தினி

உலகச் சதுரங்க வெற்றியாளராக வாகை சூடி வரலாறு படைத்துள்ளார் இளம் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் தொம்மராஜு, 18.

ரஷ்ய சதுரங்க வீரர் கேரி காஸ்பராவ் 1985ஆம் ஆண்டு தமது 22 வயதில் உலக வெற்றியாளர் பட்டம் வென்றதே முன்னைய சாதனை. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு குகே‌ஷ் அதனை முறியடித்துள்ளார்.

நான்கு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இறுதி சுற்றான பதினான்காம் ஆட்டத்தில் கறுப்புக் காய்களோடு குகேஷ் புரிந்த சாதனையை நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்களை உள்ளடக்கிய சிங்கப்பூரின் செந்தோசா, ஈகுவாரியஸ் விடுதியின் நேரடி அரங்கம் மெய்சிலிர்த்து ஆரவாரித்து வரவேற்றது. அவருக்கு எதிரே விளையாடிய சீன கிராண்ட்மாஸ்டரும் கடந்தாண்டின் உலகச் சதுரங்க வெற்றியாளருமான டிங் லிரன் தமது இறுதி ஒன்பது நிமிடங்களில் பிசகான நகர்த்தல் ஒன்றினை செய்து தோல்வியை ஒப்புக்கொண்டார். டிங்கின் பிசகான நகர்த்தலை உடனே கண்டுகொண்ட குகேஷ் பரபரப்பாகவும் கண்ணீரோடும் காணப்பட்டார்; இருக்கையிலிருந்து எழுந்து நடமாடலானார்.

6.5-6.5 என்றிருந்த சமப்புள்ளி நிலவரம் நேற்று குகேஷின் வெற்றியை உறுதிப்படுத்தும் வண்ணம் 7.5-6.5 என மாறி அவரை 18ஆவது உலகச் சதுரங்க வெற்றியாளராக அரியணையேற்றியது.

சற்று எதிர்பாரா வகையில் வென்றதாக பகிர்ந்துகொண்ட குகேஷ், இந்தியாவிடமிருந்து உலகச் சதுரங்க வெற்றியாளர் பட்டமானது 2013ஆம் ஆண்டில் பறிபோன சமயத்தில் அத்தருணத்தை நேரடி பார்வையாளராக கண்டார். அச்சமயத்தில் அவ்விருதினை இந்தியாவுக்கு மீண்டும் சேர்ப்பவராக தாம் இருக்கவேண்டும் என இலட்சியக் கோட்டைக் கட்டியதை அவர் நினைவுகூர்ந்தார்.

“பத்தாண்டுகாலமாக உலகச் சதுரங்க வெற்றியாளராவதையே முதன்மை இலக்காகக் கொண்டிருந்தேன்,” எனக் கூறிய குகேஷ் தம் கனவு ஈடேறியதில் பெருமையடைவதாக சொன்னார். தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்து வளர்ந்தவாராவார் குகேஷ்.

தோல்வியைத் தழுவிய டிங், குகேஷிற்கு வாழ்த்துக் கூறி, இது தமது முடிவல்ல என்றளவில் நம்பிக்கை தெரிவித்தார்.

நெதர்லாந்தில் வேதியியல் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் விஜய் ராஜேந்திரன் போட்டியை நேரடியாகக் கண்டுகளிக்க சிங்கப்பூர் திரும்பினார். சதுரங்க ஆர்வலரான தமது ஐந்து வயது மகன் ஐயை கிட்டத்தட்ட தினமும் விளையாட்டுகளுக்குக் கூட்டி வந்துள்ளார்.

“குகேஷின் வெற்றி எங்கள் அனைவருக்குமான வெற்றியாகும். தனிப்பட்ட அளவில் எனது முன்மாதிரியாக குகேஷின் தந்தை திரு தொம்மராஜுவை கருதுகிறேன். மகனுக்காக இவ்வளவு அர்ப்பணிப்புகளைச் செய்துள்ள அவரை பின்பற்றி நடக்கவும் முயல்கிறேன்,” என்றார் விஜய், 42.

இலங்கையிலிருந்து போட்டியைக் காண தமது தாயாரோடு சிங்கப்பூர் வந்திருந்த 13 வயது ஹிரங்கா, ரசிகர்கள் அறையில் விளையாட்டை நேரலையாய் பார்த்துக்கொண்டிருந்தபடியே பொது விளையாட்டு ஒன்றில் ஆழ்ந்திருந்தார். டிங்கின் இறுதி நகர்த்தலின்போது துள்ளி குதித்து அங்கிருந்த ரசிகர் திரளோடு “குகேஷ்” என முழக்கமிட தொடங்கினார். தம்மை போன்ற இளம், இந்திய பின்னணி கொண்ட விளையாட்டாளர்களுக்கு இவ்வெற்றி விலைமதிப்பில்லா உத்வேகம் அளிப்பதாகக் கூறினார்.

“பிற விளையாட்டுக்களைப் போலன்றி சதுரங்கத்தில் மன ஆரோக்கியத்துக்குத் தரும் முக்கியத்துவம் குறைவாக உள்ளது. ஆனால், சதுரங்கத்தில் அதன் பங்கை குறைத்து எடைபோடக்கூடாது,” என்று எதிர்வரும் சதுரங்க விளையாட்டாளர்களுக்கு அறிவுறுத்தினார் குகேஷ். நெடுநாள் தம் பயணம் நீடிக்கவேண்டும், மேக்னஸ் கார்ல்சனைப் போல் சதுரங்கத்தில் கோலோச்சவேண்டும் என்று தம் அடுத்தக்கட்ட திட்டத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.

வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) மாலை 6 மணி அளவில் ஈகுவாரியஸ் விடுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் அவருக்குப் பட்டம் வழங்கப்படும்.

குகேஷ் வெற்றிப் பரிசாக 1.35 மில்லியன் அமெரிக்க டாலரை (S$1.82 மில்லியன்) அள்ளிச் செல்கிறார்.

ஸ்டாலின் வாழ்த்து

உலகச் சதுரங்க வெற்றியாளர் பட்டம் பெற்ற இந்திய வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகச் சதுரங்கத் தலைநகரமாக சென்னை திகழ்வதை குகேஷின் இந்த வெற்றி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

“இந்தியச் சதுரங்க விளையாட்டின் பாரம்பரியம், குகேஷின் இந்த வரலாற்று வெற்றி மூலம் தொடர்கிறது. 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை குகேஷ் பெறுவது குறிப்பிடத்தக்க சாதனை,” என்று முதல்வர் ஸ்டாலின் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

vishnuv@sph.com.sg

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்