புதுடெல்லி: இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு நாட்டின் ஆக உயரிய விருதுகளில் ஒன்றை அரசாங்கம் வழங்கியிருக்கிறது. ‘பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்’ விருதை வழங்கி அவரை இந்தியா கௌரவித்துள்ளது.
திறமைக்கு வயது ஒரு தடையன்று என்பதை நிரூபித்திருக்கிறார் 14 வயது சூர்யவன்ஷி. அதிரடி பந்தடிப்பால் மட்டுமின்றி இப்போது விருதாலும் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இந்த இளஞ்சிங்கம்.
அதிபர் திரௌபதி முர்முவிடம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) விருதைப் பெற்றார் சூர்யவன்ஷி.
பிரதமர் நரேந்திர மோடியையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறார் சூர்யவன்ஷி. அடுத்த தலைமுறை இந்தியத் தலைவர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் அது ஊக்குவிப்பாக அமையும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
விருது நிகழ்ச்சியில் பங்கெடுப்பதால், விஜய் ஹசாரே கிண்ணப் போட்டிகளில் அவரால் கலந்துகொள்ள இயலாது என்று தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் அருணாசலப் பிரதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் பீகாருக்காக ஆடிய அவர், 84 பந்தில் 190 ஓட்டத்தைக் குவித்தார். உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தின் மூலம் எதிரணியினரைத் திக்குமுக்காடச் செய்கிறார் சூர்யவன்ஷி. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியிலும் விளையாடிய அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் விளாசி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இளங்கன்று பயமறியாது எனும் கூற்றுக்கேற்ப உற்சாகமாய் கிரிகெட் வானில் உலா வருகிறார் இந்த இளம் நிலா.
இந்தியாவில் பிரதமர் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது, 5க்கும் 18க்கும் இடைப்பட்ட வயதினருக்கு வழங்கப்படுகிறது. கலை, கலாசாரம், சுற்றுச்சூழல், புத்தாக்கம், அறிவியலும் தொழில்நுட்பமும், சமூக சேவை, விளையாட்டு முதலிய துறைகளில் சிறப்பாகச் செய்வோருக்கும் துணிவை வெளிப்படுத்துவோருக்கும் அந்த விருது தரப்படுகிறது. தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டிய திறமைகளைப் பாராட்டுவதோடு இளையர்களின் உன்னதத்தையும் கொண்டாடுகிறது அந்த விருது.

