தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பந்தடிப்பாளர்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறார்

1 mins read
7355cb98-c25c-4a50-8671-c083affbbf9f
ஆட்டம் தொடங்குவதற்கு முன், சென்னை சூப்பர் கிங்சின் டோனியுடன் குஜராத் டைட்டன்சின் ஹார்திக் பாண்டியா. படம்: ஏஎஃப்பி -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் மதிக்கத்தக்க ஓட்டங்களைக் குவித்தபோதும் தமது அணி பந்தடிப்பாளர்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி.

இவ்வாண்டிற்கான இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடர் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு வெற்றியாளரான குஜராத் அணியிடம் சென்னை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுப்போனது.

முதலில் பந்தடித்த சென்னை அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்களை எடுத்தது. நான்கு பந்துகள் எஞ்சிய நிலையில், இலக்கை விரட்டி வெற்றிபெற்றது குஜராத் அணி.

போட்டிக்குப்பின் பேசிய டோனி, "இரவில் பனிபெய்யும் என்பது தெரியும். அதனால் இன்னும் சற்று அதிகமாக ஓட்டம் சேர்த்திருக்கலாம். ருதுராஜ் கெய்க்வாட் (92 ஓட்டங்கள்) மிகச் சிறப்பாக ஆடினார். இளம் வீரர்கள் முன்வந்து பொறுப்புடன் விளையாடுவது மிக முக்கியம் என நினைக்கிறேன்," என்று சொன்னார்.

அறிமுக ஐபிஎல் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கரை டோனி பாராட்டினார்.

அடுத்ததாக திங்கட்கிழமை (ஏப்ரல் 3) இரவு சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் நடக்கவுள்ள போட்டியில் சென்னை அணி, லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியை எதிர்த்தாடவிருக்கிறது.