தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லி அணியினருக்கு அபராதம்

1 mins read
af3026db-2653-4140-a709-98f4509b8e95
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பன்ட். - படம்: ஏஎஃப்பி

விசாகப்பட்டினம்: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பன்டுக்கு ரூ.24 லட்சம் (S$38,750) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அணியின் மற்ற வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது போட்டித்தொகையில் 25%, இவற்றில் எது குறைவோ அது அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக புதன்கிழமை (ஏப்ரல் 3) நடந்த போட்டியில் டெல்லி அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதே இதற்குக் காரணம்.

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி பந்துவீசுவதற்குக் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது இது இரண்டாம் முறை.

முதலில் பந்தடித்த கோல்கத்தா அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 272 ஓட்டங்களைக் குவித்தது. அவ்வணியின் சுனில் நரைன் (85), அங்கிரிஷ் ரகுவன்ஷி (54), ஆண்ட்ரே ரசல் (41), ரிங்கு சிங் (26) அதிரடியாக விளையாடினர்.

பேரிலக்கை விரட்டிய டெல்லி அணி 17.2 ஓவர்களில் 166 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, 106 ஓட்ட வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் வென்ற கோல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை (மார்ச் 5) நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.

குறிப்புச் சொற்கள்