அகமதாபாத்: அடுத்த ஆண்டிற்கான இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குத் தலைமையேற்று வழிநடத்தவுள்ளார் இந்திய அணியின் தொடக்கப் பந்தடிப்பாளர் ஷுப்மன் கில்.
கடந்த 2022ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்படுத்தப்பட்ட நிலையில், 2022, 2023 என இரு பருவங்களிலும் இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா அதன் தலைவராகச் செயல்பட்டார்.
இந்நிலையில், பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்புகிறார்.
இதனையடுத்து, குஜராத் அணியின் தலைவராக 24 வயது கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை 33 போட்டிகளில் விளையாடி மூன்று சதம், எட்டு அரைசதம் உட்பட 1,373 ஓட்டங்களைக் குவித்துள்ளார் கில்.
“குஜராத் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். குஜராத் அணி நிர்வாகம் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி,” என்று கில் தெரிவித்துள்ளார்.
அறிமுக ஆண்டிலேயே ஐபிஎல் பட்டம் வென்ற குஜராத் அணி, அதற்கடுத்த 2023ஆம் ஆண்டில் இறுதிப் போட்டிவரை முன்னேறியது.