தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல் 2025: சென்னையை எதிர்கொள்ளும் மும்பை

2 mins read
bde98296-f230-4872-aa23-d8c47510d543
சென்னை அணிக்கு விளையாடும் நட்சத்திர வீரர்கள் டோனி, ஜடேஜா. - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் சனிக்கிழமை (மார்ச் 22) தொடங்கியது.

தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) இரவு 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் ஆட்டம் நடக்கிறது.

சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா ஐந்து முறை ஐபிஎல் கிண்ணத்தை வென்று சாதித்துள்ளன. ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளுமே அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை.

சென்னை அணி ஐந்தாவது இடத்தில் முடித்தது. மும்பை அணி கடைசி இடமான பத்தாவது இடத்தில் முடித்து ஏமாற்றம் அளித்தது.

இந்தப் பருவத்தில் கிண்ணத்தை வெல்ல இரு அணிகளும் கடுமையாகப் போராடலாம் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

ஹர்திக், பும்ரா இல்லை:

சென்ற பருவத்தில் சில ஆட்டங்களை நேரத்திற்குள் முடிக்காத காரணத்தால் மும்பை அணித் தலைவர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓர் ஆட்டம் தடை விதிக்கப்பட்டது.

இதனால் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மும்பை அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயத்திலிருந்து மீண்டு வரும் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவும் முதல் சில ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.

மும்பை பலம்:

மும்பை அணிக்கு அதன் பந்தடிப்பாளர்கள் பலமாக உள்ளனர். ரோகித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், வில் ஜேக்ஸ், ரயன் ரிக்கெல்டன் என அதிரடி வீரர்கள் பலர் உள்ளனர்.

இதனால் அந்த அணி பெரிய இலக்கைகூட எளிதாக விரட்டும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

பந்துவீச்சில் தீபக் ‌‌ சகார், டிரென்ட் போல்ட், மிட்சல் சான்ட்னர் நம்பிக்கை தருவதால் மும்பை அணிக்கு ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் இருக்காது எனக் கூறப்படுகிறது.

சென்னைக்கு சவால்:

இம்முறை சென்னை அணி தொடக்கம் முதலே வெற்றிகளைக் குவிக்கத் திட்டமிடுகிறது. இருப்பினும் அதன் பந்தடிப்புப் பிரிவு சற்று வலுவில்லாமல் இருப்பதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

அணித் தலைவர் ருத்துராஜ் கைக்வாட், ரச்சின் ரவீந்தர, ரவீந்தர ஜடேஜா மட்டுமே நம்பிக்கை தரும் விதமாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

மகேந்திர சிங் டோனிக்கு இது கடைசி தொடர் என்றும் தகவல்கள் வெளியாகி வருவதால் டோனி தனது முழு பலத்தையும் காட்டுவார் என்று நம்பப்படுகிறது.

பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜாவை சென்னை அதிகம் சார்ந்துள்ளது. சென்னை அணி எப்போதும் மெதுவாகத் தொடங்கி இறுதியில் வெல்லும் என்பதால் இந்தத் தொடரை அந்த அணியின் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் பார்க்கின்றனர்.

அனிருத் இசை நிகழ்ச்சி:

போட்டி தொடங்குவதற்கு முன்னர் தொடக்க விழா பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது.

இதில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.

கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நடக்கும் இசை நிகழ்ச்சியில் கண்கவர் நடனங்களும் இடம் பெறுகின்றன.

குறிப்புச் சொற்கள்