ஐபிஎல் 2025: ஹைதராபாத்தைச் சந்திக்கும் ராஜஸ்தான்

2 mins read
d062afd4-1df9-4f6f-908e-f3cbf12f9dbc
கடந்த ஆண்டு ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா (இடது) டிராவிஸ் ஹெட்(நடுவில்), கிளாசன் எதிரணி பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினர். - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) மாலை 6 மணிக்கு ஹைதராபாத் விளையாட்டரங்கில் ஆட்டம் நடக்கிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணி தோல்வியடைந்து கிண்ணத்தைப் பறிகொடுத்தது. ராஜஸ்தான் அணி மூன்றாவது இடத்தில் முடித்து பிளே ஆப் சுற்றில் தோல்வியடைந்தது.

பந்தடிப்பில் ஆதிக்கம்:

ஹைதராபாத் அணியின் பெரும்பலம் அதன் பந்தடிப்பு. கடந்த ஆண்டு அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா எதிரணி பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினர்.

இதனால் பின்வரிசையில் வந்த மற்ற பந்தடிப்பாளர்களும் அதிரடியாக ஆடி அணிக்கு நல்ல ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். அதனால் இம்முறையும் ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடக்கூடும்.

பந்துவீச்சில் அணித் தலைவர் பேட் கமின்சுக்கு துணையாக முகம்மது ‌‌ஷமி, ஹர்சல் பட்டேல் உள்ளனர். இருப்பினும் அந்த அணியின் சுழற்பந்துவீச்சு பலவீனமாக உள்ளது.

நம்பிக்கை நாயகர்கள் இல்லை

கடந்த சில பருவங்களாக ராஜஸ்தான் அணியைக் காப்பாற்றியது அதன் பந்துவீச்சுதான். ஆனால், இம்முறை பலமான பந்துவீச்சாளர்கள் இல்லாமல் அந்த அணி தோற்றமளிக்கிறது.

பந்தடிப்பில் அணித் தலைவர் சஞ்சு சாம்சன், யஸ்ஹஸ்வி ஜெய்ஸ்வால், ரியன் பராக் ஆகியோரைப் பெரிதும் சார்ந்துள்ளது ராஜஸ்தான். அவர்கள் ஓட்டங்கள் குவிக்காவிட்டால் ராஜஸ்தான் அணிக்கு அது பெரும் அடியாக இருக்கும்.

இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு அதாவது ஐபிஎல் தொடரின் முதல் பருவத்தில் ராஜஸ்தான் கிண்ணத்தை வென்றது. அதன் பின்னர் அது கிண்ணத்தை வெல்லவில்லை.

குறிப்புச் சொற்கள்