அகமதாபாத்: இவ்வாண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 31), சிங்கப்பூர் நேரப்படி இரவு 10 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கிறது.
2025ஆம் ஆண்டு பருவத்தில் கிண்ணத்தை வென்ற பெங்களூரு அணி, இந்த ஆண்டும் கிண்ணத்தைத் தன்வசப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், 2022ஆம் ஆண்டு அறிமுகமான முதல் பருவத்திலேயே கிண்ணத்தைத் தட்டிச் சென்ற குஜராத் அணி, இம்முறை இறுதியாட்டத்தில் வாகைசூட பெருமுயற்சி எடுக்கும்.
‘கில்லி’யாக நிற்கும் கில்
குஜராத் அணி இந்தப் பருவத்தின் தொடக்கத்தில் சற்றுத் தடுமாறியது. இருப்பினும், பருவத்தின் பிற்பாதியில் தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் வெற்றிபெற்று, தனது வலிமையை அது நிரூபித்தது.
அணித்தலைவர் ஷுப்மன் கில் இந்தப் பருவத்தில் இதுவரை 722 ஓட்டங்கள் குவித்துள்ளார். அவருக்குப் பக்கபலமாக விளையாடும் சாய் சுதர்சன் 710 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இறுதிப்போட்டியில் இந்த இருவரும் விரைவாக ஆட்டமிழந்தால் குஜராத்தின் வாய்ப்பு நழுவக்கூடும்.
பந்துவீச்சில் ககிசோ ரபாடா 28 விக்கெட்டுகள் வீழ்த்தி, பட்டியலின் முதலிடத்தில் உள்ளார். ரபாடாவுடன் முகம்மது சிராஜ் தொடக்கத்தில் விக்கெட் வீழ்த்துவதால் எதிரணிகள் ஓட்டங்களைக் குவிக்கத் தடுமாறுகின்றன.
சீறும் பெங்களூரு
பெங்களூரு அணியைப் பொறுத்தவரை, ஆட்டத்திற்கு ஏற்ப அனைத்து வீரர்களும் விளையாடுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
விராத் கோஹ்லி, தேவ்தத் படிக்கல், குருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அணித் தலைவர் ரஜத் பட்டிதார் என முன்னணி வீரர்கள் பலர் நெருக்கடியான நேரங்களில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்கின்றனர்.
இந்தப் பருவத்தில் குஜராத் அணியுடன் பெங்களூரு அணி மும்முறை விளையாடியுள்ளது. முதல் சுற்றில் இரு அணிகளும் தரப்புக்கு ஒரு வெற்றி பெற்றன.
இருப்பினும், மே 26ஆம் தேதி நடந்த குவாலிஃபயர்-1 ஆட்டத்தில் குஜராத் அணியை பெங்களூரு ஊதித் தள்ளியது. 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வென்றது.
ஆனாலும் நம்பிக்கை தளராது குஜராத் அணி குவாலிஃபயர்-2 ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.
குஜராத், பெங்களூரு அணிகளில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் இருப்பதால் இறுதி ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

