சென்னை: நடப்பு இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரில் பட்டியலின் கடைசி இடத்தில் தத்தளித்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
அவ்வணியின் பந்தடிப்பு வலுவிழந்து காணப்படும் நிலையில், அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட்டும் காயம் காரணமாகத் தொடர் முழுவதும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மகேந்திர சிங் டோனி மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று.
இந்நிலையில், ‘பேபி ஏபி’ என்றழைக்கப்படும் தென்னாப்பிரிக்க இளம் வீரர் டிவால்ட் பிரெவிஸ் சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ் போல விளையாடுவதால் பிரெவிஸ் அப்பெயரில் அழைக்கப்படுகிறார். 21 வயதான அவர் ரூ.2.2 கோடிக்கு (S$338,000) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை 81 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பிரெவிஸ் 1,787 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரே போட்டியில் 162 ஓட்டங்களை விளாசியுள்ளார்.
இவர் ஐபிஎல் தொடருக்குப் புதியவரல்லர்; மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பத்து ஆட்டங்களில் களமிறங்கியுள்ளார்.
கரீபிய பிரிமியர் லீக் (வெஸ்ட் இண்டீஸ்), மேஜர் கிரிக்கெட் லீக் (அமெரிக்கா), எஸ்ஏடி20 (தென்னாப்பிரிக்கா) ஆகிய டி20 லீக் தொடர்களிலும் இவர் விளையாடியிருக்கிறார்.
அண்மைய எஸ்ஏ20 லீக்கில் எம்ஐ கேப் டவுன் அணிக்காக விளையாடிய பிரெவிஸ், 184.17 என்ற பந்தடிப்பு விகிதத்தில் மொத்தம் 291 ஓட்டங்களை விளாசினார். கேப் டவுன் அணி முதன்முறையாகப் பட்டம் வென்றது.
தொடர்புடைய செய்திகள்
தொடரின் முதல் பாதியில் ஏமாற்றமளித்த சென்னை அணி, பிரெவிசின் வரவால் இரண்டாம் பாதியில் எழுச்சி பெறும் என அதன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.